இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஜோ பைடன்! 130-க்கும் மேற்பட்டோர் முக்கிய பதவிகளில் நியமனம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல இந்திய-அமெரிக்கர்களை முக்கிய தூதர் பதவிகளுக்கு பரிந்துரைத்துள்ளார்.
2020-ல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதியாக நியமித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் அனைத்து துறைகள் மற்றும் ஏஜென்சிகளுக்கு இந்திய-அமெரிக்கர்களை நியமித்துள்ளார்.
அந்த வகையில், ஜோ பைடன் இதுவரை தனது நிர்வாகத்தில் 130-க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்களை முக்கிய பதவிகளில் நியமித்துள்ளார், இது அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு சதவீதமாக இருக்கும் இந்திய வம்சாவளி சமூகத்தின் சிறந்த பிரதிநிதித்துவமாகும்.
இதன் மூலம் அவர் 2020-ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக சமூகத்திற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், 80-க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்களை நியமித்த டொனால்ட் டிரம்ப் மற்றும் 60க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்களை முக்கிய பதவிகளில் நியமித்த பராக் ஒபாமாவின் சாதனையையும் தகர்த்தார்.
20-க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள் முன்னணி அமெரிக்க நிறுவனங்கலின் தலைமை பொறுப்பில் உள்ளனர்.
ரொனால்ட் ரீகன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் (1987-ல்) முதன்முதலில் இந்திய-அமெரிக்கர் உயரிய அரசாங்க பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார். இப்போது, ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்திய-அமெரிக்கர்களை நியமித்துள்ளார்.
ஜோ பைடன் செனட்டராக இருந்த நாட்களில் இருந்து இந்திய வம்சாவளி சமூகத்துடன் நெருங்கிய உறவைப் பேணி வருகிறார். 2020-ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை தனது துணையாகத் தேர்ந்தெடுத்து வரலாற்றைப் படைத்தார்.
இந்தியாஸ்போராவால் தொகுக்கப்பட்ட வெள்ளை மாளிகையில் உள்ள இந்திய-அமெரிக்கர்களின் பட்டியல், வெள்ளை மாளிகையில் அல்லது பைடனின் ஓவல் அலுவலகத்தில் இந்திய-அமெரிக்கர்கள் இல்லாத ஒரு சில சந்திப்புகள் மட்டுமே இருக்கும் என்பதை பிரதிபலிக்கிறது.
ஜனாதிபதி ஜோ பைடன் பல இந்திய-அமெரிக்கர்களை முக்கிய தூதர் பதவிகளுக்கு பரிந்துரைத்துள்ளார். இந்தியாஸ்போரா தயாரித்த பட்டியலின்படி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு அலுவலகங்களுக்கு 40-க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். டாக்டர் அமி பெரா, ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பிரமிளா ஜெயபால் ஆகிய நான்கு பேர் பிரதிநிதிகள் சபையில் உள்ளனர். இதில் நான்கு மேயர்களும் அடங்குவர்.
கூகுளின் இந்திய-அமெரிக்கர்களான சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்டின் சத்யா நாதெல்லா உட்பட, 20-க்கும்மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு தலைமை தாங்குகின்றனர். அடோப்பின் சாந்தனு நாராயண், ஜெனரல் அட்டாமிக்ஸின் விவேக் லால், டெலாய்ட்டின் புனித் ரென்ஜென், ஃபெடெக்ஸின் ராஜ் சுப்ரமணியம் ஆகியோர் இதில் அடங்குவர்.