இன்னும் ஒன்றரை மணி நேரம் தான் இருக்கும்... 200 பேர் உயிரை காப்பாத்தனும்! அபாய குரல் எழுப்பியுள்ள மருத்துவமனை
இந்தியாவின் தலைநகரில் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வரும் நிலையில், இன்னும் ஒரு மணி நேரத்திற்கு தான் ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளதாக தனியார் மருத்துவமனை ஒன்று அபாய குரல் எழுப்பியுள்ளது.
கடந்த சில தினங்களாகவே இந்தியாவில் கொரோனா உச்சத்தை தொட்டு வருகிறது. நாள் ஒன்றிற்கு லட்சம் பேர் பாதிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
குறிப்பாக தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை கொடுக்க முடியவில்லை.
இதனால் டெல்லி நகரே திணறி வருகிறது. டெல்லி அரசும், மத்திய அரசிடம் கை கூப்பி எங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இருக்கும் தனியார் மருத்துவமனையான பத்ரா மெடிகல் ரிசர்ச் டெண்டரில், 260 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், இவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் குறைப்பாட்டிற்காக அதன் நிர்வாக இயக்குநர் மருத்துவர்.எஸ்.சி.எல்.குப்தா டெல்லி அரசிடம் கேட்டிருந்தார்.
இதற்காக தன்னிடம் உள்ள இருப்பை பொறுத்து டெல்லி அரசு அவர்களுக்கு வெறும் 500 மெட்ரிக் லிட்டர் ஆக்ஸிஜன் இன்று காலை அனுப்பியுள்ளது. இது மொத்தம் ஒன்றரை மணி நேரத்திற்கே வரும் எனவும், மேலும் அனுப்பி காப்பாற்றும்படியும் அவர் அபயக்குரல் எழுப்பியுள்ளார்.
இவர்களது அன்றாட ஆக்ஸிஜன் தேவை 8000 மெட்ரிக் டன் எனவும் குப்தா குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை டெல்லியின் மற்றொரு தனியாரின் ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டினால் 25 பேர் பலியாகியுள்ள நிலையில், பத்ரா மருத்துவமனையின் நோயாளிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.