தேர்தலில் போட்டியிட 247-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த பத்மராஜன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை பத்மராஜன் தாக்கல் செய்துள்ளார்.
247-வது முறை
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகின்ற 17-ம் திகதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் அறிவிக்காத நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே தற்போது வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் (64) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இது இவர் தாக்கல் செய்துள்ள 247-வது வேட்பு மனுவாகும்.
இது குறித்து பத்மராஜன் கூறுகையில், "நான் இதுவரை 246 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மனு தாக்கல் செய்தது 247-வது முறையாகும்.
இதுவரை நான் 6 ஜனாதிபதி தேர்தல், 6 துணை ஜனாதிபதி தேர்தல், 33 பாராளுமன்றத்தேர்தல், 76 எம்.எல்.ஏ.க்கள் தேர்தல், மாநகராட்சி மேயர் தேர்தல், கவுன்சிலர் தேர்தல் ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன்.
கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பிரபலங்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். கடைசியாக வயநாடு மக்களவை தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து நின்று 286 வாக்குகள் பெற்றேன்.
அதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 16 வாக்குகள் பெற்றேன். இதற்காக நான் பிரச்சாரம் செய்ய மாட்டேன்.
தேர்தலில் போட்டியிடுவது மட்டுமே என்னுடைய நோக்கம். நான் உயிரோடு இருக்கும் வரை அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |