பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி சுட்டுக்கொலை - யார் இந்த ஹாஷிம் மூசா?
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஹாஷிம் மூசாவை இந்தியா ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் (pahalgam attack) பகுதியில், கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின், நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மே 7 ஆம் திகதி, ஆபரேஷன் சிந்தூர் (opertion sindoor) என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, இரு நாடுகளும் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கிக்கொண்டன. மே 10 ஆம் திகதி இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் 3 பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆபரேஷன் மகாதேவ்
ஜூலை மாத தொடக்கத்தில் டச்சிகாம் காட்டில் சந்தேகத்திற்கிடமான தகவல் தொடர்பு ஒன்றை ராணுவம் இடைமறித்துள்ளது.
அதைத் தொடர்ந்து 14 நாட்களுக்கு, லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் பயங்கரவாதிகளின் கூட்டுக் குழு உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, உள்ளூர் மக்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று காலை 11.30 மணியளவில், 24 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் 4 பாரா படையினரைக் கொண்ட ஒரு குழு, ஆபரேஷன் மகாதேவ் (operation mahadev) என்ற பெயரில் அந்த பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஹாஷிம் மூசா
இந்த தாக்குதலில், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் சுலைமான் என்கிற ஹாஷிம் மூசா (Hashim Musa) கொல்லப்பட்டுள்ளார்.
சிறப்பு சேவை குழு (SSG) எனப்படும் பாகிஸ்தானின்ராணுவத்தின் சிறப்பு குழுவில் ஹாஷிம் மூசா பணியாற்றி பல்வேறு சிறப்பு பயிற்சிகளை பெற்றுள்ளார்.
மேலும், 2024 ஆம் ஆண்டு ககஞ்சிர் மற்றும் கந்தர்பல்லில் நடந்த பயங்கரவாத தாக்குதலிலும் மூசாவிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இவரின் புகைப்படங்களை வெளியிட்டு, இவரை பற்றி தகவல் தருபவருக்கு ரூ.20 லட்சம் பரிசு தருவதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை அறிவித்திருந்தது.
கொல்லப்பட்ட மற்ற 2 பயங்கரவாதிகள் அபு ஹம்சா மற்றும் யாசிர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நடாளுமன்றத்தில் விளக்கமளித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |