ஆபரேஷன் சிந்தூர்... நள்ளிரவில் பாகிஸ்தானில் நடந்ததென்ன? பிரதமர் வெளியிட்ட பின்னணி
இந்திய ஏவுகணைகள் நூர் கான் விமானப்படை தளம் மற்றும் பாகிஸ்தானுக்குள் உள்ள பிற இலக்குகளைத் தாக்கியதை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பொதுவெளியில் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அதிகாலை 2:30 மணி
இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு விழாவில் பேசிய பிரதமர் ஷெரீப், இந்தியாவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் அதிகாலை 2:30 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததை நினைவு கூர்ந்தார்.
மே 10ம் திகதி அதிகாலை 2:30 மணியளவில், ஜெனரல் ஆசிப் முனீர் தொலைபேசி மூலம் தன்னை அழைத்து, இந்தியா தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாகக் கூறினார். அதில் ஒன்று நாட்டின் மிக முக்கிய பகுதியான நூர் கான் விமானப்படை தளத்திலும், சில மற்ற பகுதிகளிலும் தாக்கியதாகவும் பிரதமர் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.
நூர் கான் விமானப்படை தளமானது ராவல்பிண்டிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. பாகிஸ்தானின் வான்வழி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் மிகுந்த பகுதி இது. முன்னர் சக்லாலா விமானப்படை தளம் என அறியப்பட்ட இப்பகுதி, 1971 இந்திய-பாகிஸ்தான் போரின்போதும் இந்தியப் படைகளால் குறிவைக்கப்பட்டது.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 இந்தியர்களின் உயிரைப் பறித்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மே 7 அன்று தொடங்கப்பட்ட பழிவாங்கும் இராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் கீழ் இந்தியத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்திய அரசாங்க வட்டாரங்களின் தகவல்கள் அடிப்படையில், பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அச்சத்தின் மத்தியில்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) முழுவதும் பயங்கரவாத முகாம்கள் மற்றும் முக்கியமான இராணுவ நிலைகளைத் தாக்க இந்திய விமானப்படை (IAF), இந்திய ராணுவம் மற்றும் கடற்படை இணைந்து பணியாற்றியது.
மே 10 அதிகாலையில் தாக்கப்பட்ட முதல் இலக்குகளில் சக்லாலா (நூர் கான்) மற்றும் சர்கோதாவில் உள்ள PAF தளங்களும் அடங்கும். இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) முழுவதும் பழிவாங்கும் பீரங்கித் தாக்குதலில் ஈடுபட்டதுடன், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளில் உள்ள இந்திய இராணுவ உள்கட்டமைப்பு மீது பல ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தியது.
ஆனால், மோதல் அதிகரிக்கும் என்ற அச்சத்தின் மத்தியில், பாகிஸ்தான் அவசர அவசரமாக அமெரிக்க தலையீட்டை நாடியதாக கூறப்படுகிறது. இந்திய அரசாங்க வட்டாரங்களின் தகவல்களின்படி, உத்தியோகப்பூர்வ இராணுவ ஹாட்லைன் மூலம் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு பாகிஸ்தான் தரப்பை அமெரிக்கா அறிவுறுத்தியது.
இந்த நிலையில், மே 10ம் திகதி மதியத்திற்கு மேல் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியா தரப்பை தொடர்பு கொண்டுள்ளனர். ஹாட்லைன் தகவல்தொடர்பைத் தொடர்ந்து, மே 10 மாலை முதல் அனைத்து தரை, வான் மற்றும் கடல் சார்ந்த இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |