ஆப்கானிஸ்தானுக்கு உதவ பாகிஸ்தானின் அனுமதிக்காக காத்திருக்கும் இந்தியா!
ஆப்கானிஸ்தானில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ பாகிஸ்தானின் அனுமதிக்காக இந்தியா காத்திருக்கிறது.
தாலிபான்கள் நாட்டை கைப்பற்றியதை தொடர்ந்து சர்வதேச நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு அளித்த வந்த ஆதரவை திடீரென விலக்கிக் கொண்டனர்.
இதன் விளைவாக ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது, விலைவாசி உயர்வால் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
சீனா, துருக்கி போன்ற நாடுகளில் கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானுக்கு உணவுகளை விநியோகிக்க தொடங்கிவிட்டன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ முன்வந்துள்ள இந்தியா, தரைவழியாக ஆப்கானிஸ்தானுக்கு உணவு தானியங்களை அனுப்புவதற்காக கடந்த மாதம் பாகிஸ்தானிடம் அனுமதி கேட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லும் பணிக்கு 5,000 லொறிகளை பாகிஸ்தான் வழியாக அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசு பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் கோரிக்கை தொடர்பில் பாகிஸ்தான் இன்னும் எந்த முடிவையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது.
இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
எனினும், பாகிஸ்தான் அமைதி காத்து வந்தாலும் ஆப்கானிஸ்தானுக்கு உணவு தானியங்களை அனுப்புவதில் இந்தியா உறுதியாக இருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.