பாகிஸ்தான் வங்கதேசத்துடன் எடுத்துள்ள முடிவு: இந்தியாவிற்கு புதிய நெருக்கடி
உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதிக்க பாகிஸ்தானும் வங்கதேசமும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது இந்தியாவிற்கு புதிய நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.
விசா இல்லாத நுழைவு
வங்கதேச விடுதலைப் போருக்குப் பிறகு தொடர்பற்றிருந்த உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப இரு தரப்பினரும் முயற்சித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
டாக்காவில் பாகிஸ்தான் உள்விவகார அமைச்சர் மொஹ்சின் நக்வி மற்றும் வங்கதேச உள்விவகார அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி இடையே நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு புதன்கிழமை விசா இல்லாத நுழைவு குறித்த முடிவு அறிவிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் காவல் பயிற்சித் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். மட்டுமின்றி, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் சவுத்ரியும் நக்வியும் விவாதித்துள்ளனர்.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்தே பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டன.
முன்னாள் பிரதமர் ஹசீனாவின் கொள்கைகள், அடிப்படையில் இந்தியாவுக்கு ஆதரவாகவும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் இருந்தன என்பதால், நோபல் பரிசு பெற்றவரான முகமது யூனுஸ் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக
இதனிடையே, வங்கதேசத்துடனான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க, உள்விவகார செயலாளர் குர்ராம் ஆகா தலைமையில் ஒரு கூட்டுக் குழுவையும் பாகிஸ்தான் அமைத்துள்ளது.
இந்தியாவின் இரு அண்டை நாடுகளும் பகையை மறந்து நெருக்கமாவது இந்தியாவிற்கு புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகள் வங்கதேசத்தில் விசா இல்லாமல் நுழைவது, ஐ.எஸ்.ஐ உட்பட பாகிஸ்தான் உளவாளிகளை எளிதாக அந்த நாட்டில் புழங்க அனுமதிக்கும் செயல் என்றே இந்தியா அஞ்சுகிறது.
மேலும், வங்கதேசத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் அதிக அளவில் செயல்படுவது, வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும் என்றும், இந்தியாவை குறிவைத்து வடகிழக்கு மாகாணங்களில் கிளர்ச்சியாளர் குழுக்களை ஆதரிக்கக்கூடும் என்றும் இந்தியா கவலை கொள்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |