தைவான் விமானங்களுக்கு வான்வழி தடை விதித்த பாகிஸ்தான்
Pakistan Blocks Taiwan Airlines in Airspace: பாகிஸ்தான் அரசு, தைவான் விமான நிறுவனங்களுக்கு தனது வான்வழியை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
சீனாவின் “ஒன்-சைனா” (One China) கொள்கைக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

தைவான் விமானங்களுக்கு முழுமையான தடை
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா அசிஃப், “எங்கள் விமானப் பிரிவு ஒன்-சைனா கொள்கையை பின்பற்றுகிறது. சீன மக்கள் குடியரசின் விமானங்களுக்கே அனுமதி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், சீனாவின் விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி திறக்கப்பட்டுள்ள நிலையில், தைவான் விமானங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமானப் பாதை கண்காணிப்பு தரவுகளின்படி, தைவானின் China Airlines Ltd. மற்றும் Eva Airways Corp. ஆகியவை கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் வான்வழியை தவிர்த்து புதிய பாதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளன.
சீனாவே தைவான் விமானங்களுக்கு அனுமதி
வேடிக்கை என்னவென்றால், சீனாவே தைவான் விமானங்களுக்கு தனது வான்வழியை பயன்படுத்த அனுமதி அளிக்கிறது. ஆனால் பாகிஸ்தான் விதித்துள்ள கட்டுப்பாடுகள் சீனாவின் விதிமுறைகளை விட கடுமையானதாக உள்ளன.
பாகிஸ்தான், 1951-ஆம் ஆண்டிலேயே தைவானுடன் உள்ள அதிகாரப்பூர்வ உறவுகளை துண்டித்து, பீஜிங்கை சீனாவின் ஒரே அரசாக அங்கீகரித்தது. அதன் பின்னர், சீனாவுடன் பாகிஸ்தான் வணிக, பாதுகாப்பு, மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தி வருகிறது.
குறிப்பாக, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC), பீஜிங்கின் “Belt and Road Initiative” திட்டத்தின் முக்கிய அங்கமாக, பில்லியன் டொலர் முதலீடுகளை பாகிஸ்தானில் கொண்டு வந்துள்ளது.
மேலும், சீனா பாகிஸ்தானின் மிகப்பெரிய ஆயுத வழங்குநராகவும் உள்ளது. சமீபத்தில், இரு நாடுகளும் China-Pakistan Information Corridor என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளன.
இந்த நடவடிக்கை, பாகிஸ்தான்-சீனா உறவுகள் மேலும் வலுப்பெறுவதையும், தைவானுக்கு எதிரான பாகிஸ்தானின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |