இலங்கையில் பெண்ணிடம் அத்துமீறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் - மறைத்த நிர்வாகம்
2026 T20 உலக கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி, சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியதால், ரசிகர்களிடம் கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர், உலக கிண்ணத்திற்காக சென்ற இடத்தில் பெண்ணிடம் அத்துமீறிய விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணிடம் அத்துமீறிய பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெற்ற நிலையில், அங்குள்ள கோல்டன் கிரவுன் ஹொட்டல் ஒன்றில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கியுள்ளனர்.

சூப்பர் 8 சுற்று போட்டிக்கு முன்னதாக ஹொட்டலில் அறையை சுத்தம் செய்ய வந்த பெண் ஊழியர் ஒருவரிடம் பெயர் வெளியிடப்படாத பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
உடனடியாக அந்த பெண் சத்தமிட்டு அங்கிருந்த ஊழியர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஹொட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு, இது குறித்து நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
கிரிக்கெட் வீரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹொட்டல் நிர்வாகம் வலியுறுத்திய நிலையில், பாகிஸ்தான் அணி மேலாளர் நவைத் சீமா மன்னிப்பு கோரியதோடு, அந்த வீரருக்கு அபராதம் விதித்து, விடயம் காவல்நிலையம் வரை செல்லாமல் தடுத்தார்.

தொடரில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி நாடு திரும்பியுள்ள நிலையில், குறிப்பிட்ட வீரர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்த போது, பாகிஸ்தான் வீரர் ஹைதர் அலி, பெண்ணிடம் அத்துமீறியதாக கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, பெண் ஊழியரிடம் அத்துமீறியதற்காக பாகிஸ்தான் அணியின் மசாஜ் பயிற்சியாளர் மலாங் அலி மீதும் புகார் அளிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |