இந்திய விமானங்களுக்கு வான்வெளி தடையை நீட்டித்த பாகிஸ்தான்
Pakistan Extends India Airspace Ban to Dec 24: இந்திய விமானங்களுக்கு வான்வெளி தடையை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.
இந்திய விமானங்களுக்கு வான்வெளி தடை நீட்டிப்பு
இந்தியாவுடன் நீடித்து வரும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றத்தின் மத்தியில், இந்திய விமானங்கள் தனது வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடையை பாகிஸ்தான் மேலும் நீட்டித்துள்ளது.
புதிய அறிவிப்பின்படி, இந்த தடை 2026 டிசம்பர் 24-ஆம் திகதி அதிகாலை 4:59 மணி வரை அமுலில் இருக்கும் என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை முதன்முதலில் 2025 ஏப்ரல் 23 அன்று அமுல்படுத்தப்பட்டது. இதன்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வர்த்தக விமானங்கள், பயணிகள் விமானங்கள் மற்றும் இராணுவ விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த முடியாது.
2025 ஏப்ரலில் இந்திய நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது.
எனினும், அந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்ததுடன், சுயாதீன மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது. இதையடுத்து, 2025 ஏப்ரல் 30 அன்று இந்தியாவும் தனது வான்வெளியை பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு மூடியது. பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது.
2025 மே 6 மற்றும் 7-ஆம் திகதிகளில் இந்தியா பாகிஸ்தானின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் “Operation Bunyanum Marsoos” என்ற நடவடிக்கையை மேற்கொண்டு இந்திய இராணுவ இலக்குகளை தாக்கியதாக தெரிவித்தது. அந்த மோதலின் போது 8 இந்திய போர் விமானங்களையும், பல ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. சுமார் 87 மணி நேரம் நீடித்த பதற்றத்திற்குப் பின்னர், அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சியால் 2025 மே 10 அன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இந்த வான்வெளி தடை இந்திய விமானத் துறைக்கு அதிக பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட தூர மாற்று வழிகளில் விமானங்களை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், இந்திய விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளன. அதே சமயம், பாகிஸ்தான் விமானத் துறையில் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இதற்கு முன்பும் 1999 கார்கில் மோதல் மற்றும் 2019 புல்வாமா நெருக்கடி காலங்களில் இந்திய விமானங்களுக்கு இதேபோன்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |