பாகிஸ்தானில் இந்து ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் மத நிந்தனை செய்த குற்றச்சாட்டில் இந்து ஆசிரியர் ஒருவருக்கு உள்ளூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.
நௌதன் லால் (Nautan Lal) என்ற அந்த ஆசிரியருக்கு, சிந்து மாகாணத்தில் உள்ள கோட்கி நீதிமன்றம் கூடுதலாக 50,000 பாகிஸ்தானி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
2019-ஆம் ஆண்டு முதல் விசாரணைக் கைதியாக சிறையில் இருக்கும் லால் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்க இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை ஜாமீன் கோரிய அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
2019 செப்டம்பரில் இந்த சம்பவம் நடந்தது. பள்ளியின் உரிமையாளரும், உள்ளூர் அரசு பட்டப்படிப்பு கல்லூரியில் இயற்பியல் பாடம் நடத்தும்வருமான நௌதன் லால், பள்ளிக்கு வந்து நபிக்கு எதிராக நிந்தனை செய்ததாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, ஜமாத்-இ-அஹ்லே சுன்னத் கட்சியின் தலைவரும் உள்ளூர் மதகுருமான முஃப்தி அப்துல் கரீம் சயீதியும் லால் மீது நிந்தனைச் சட்டத்தின் கீழ் பொலிஸில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து நௌதன் லால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த செய்தி பரவியதும், நகரத்தில் ஒரு போராட்டம் வெடித்தது மற்றும் ஒரு வன்முறை கும்பல் கோட்கியில் உள்ள சச்சோ சத்ரம் தாம் கோவிலை (Sacho Satram Dham) தாக்கி, அதன் சிலைகளை சேதப்படுத்தியது.
சச்சோ சத்திரம் கோவிலின் பராமரிப்பாளர் ஜெய் குமார் கூறுகையில், முகமூடி அணிந்த 50 பேர் கோவிலை தாக்கியதாகவும், ஆனால் 500 முஸ்லிம்கள் பின்னர் வந்து கோவிலை இரவு முழுவதும் காத்ததாகவும் கூறினார்.
1980களில் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி ஜெனரல் ஜியாவுல் ஹக்கால் பாகிஸ்தானின் மத நிந்தனைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டங்களின் கீழ் யாரும் தூக்கிலிடப்படவில்லை, ஆனால் நிந்தனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
மனித மற்றும் சிவில் உரிமைகள் குழுக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் தனிப்பட்ட பகைகள் மற்றும் நிலத் தகராறுகளைத் தீர்ப்பதற்கு தெய்வ நிந்தனைச் சட்டம் பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளன.
பாகிஸ்தானில் இந்துக்கள் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமாக உள்ளனர். அதிகாரபூர்வ மதிப்பீட்டின்படி பாகிஸ்தானில் 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர்.
இருப்பினும், நாட்டில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்கின்றனர் என்று அவர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தானின் பெரும்பான்மையான இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் குடியேறியுள்ளனர், அங்கு அவர்கள் கலாச்சாரம், மரபுகள் மற்றும் மொழியை முஸ்லீம் குடியிருப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் அடிக்கடி தீவிரவாதிகளால் துன்புறுத்தப்படுவதாக புகார் கூறுகின்றனர்.