இந்தியாவிற்கு எதிராக ட்ரம்பின் வரி விதிப்பால் பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்
இந்தியாவிற்கு எதிராக ஜனாதிபதி ட்ரம்பின் 50 சதவீத வரி விதிப்பால், பாஸ்மதி அரிசி ஏற்றுமதி உட்பட பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்தை அடைய உள்ளது.
பாகிஸ்தானுக்கு சாதகமாக
இந்திய வர்த்தகர்கள், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பாஸ்மதி விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், மிகவும் கவலையுடனும் நிச்சயமற்ற தன்மையுடனும் உள்ளனர், அரசாங்கம் இந்த குழப்பத்திலிருந்து வெளியே வர உதவும் என்று நம்புகிறார்கள்.
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதற்கு முன்பு, இந்தியா மீது ட்ரம்ப் நிர்வாகம் 25 சதவீத வரி விதித்திருந்தது. இதனால் அமெரிக்கா இறக்குமதி செய்யும் இந்தியப் பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரித்தது.
எதிர்வரும் 28ம் திகதி முதல் இந்த 50 சதவீத வரி அமுலுக்கு வருகிறது. தற்போது இந்தியா மீதான இந்த 50 சதவீத வரியானது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இது அமெரிக்க சந்தையில் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய முன்னிலையை அளிக்க உள்ளது. பாகிஸ்தானுக்கு வெறும் 19 சதவீத வரி மட்டுமே ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்காவில் இந்தியாவின் பாஸ்மதி அரிசிக்கு பாகிஸ்தானை விட 31 சதவீதம் அதிகமாக வாடிக்கையாளர்கள் செலவிட நேரும். பாகிஸ்தான் வர்த்தகர்கள் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து ஆர்டர்களைப் பெறத் தொடங்கியுள்ளனர், ஆனால் விலை வேறுபாடு காரணமாக இந்திய வர்த்தகர்களால் பேரம் பேசக்கூட முடியவில்லை.
இந்திய வர்த்தகர்களுக்கு
இது இந்தியப் பொருளாதாரத்திற்கு கடும் பின்னடைவாக மாற உள்ளது. 1121 மற்றும் 1509 போன்ற பிரபலமான அரிசி ரகங்களின் விலைகள் ஏற்கனவே குவிண்டாலுக்கு ரூ.4,500 லிருந்து ரூ.3,500-ரூ.3,600 ஆகக் குறைந்துள்ள நேரத்தில் ட்ரம்பின் இந்த வரி விதிப்பு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் இந்த வாய்ப்பை மொத்தமாகப் பயன்படுத்தும் என்றால், விலைகள் ரூ.3,000 ஐ எட்டக்கூடும் என்ற அச்சம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ட்ரம்பின் இந்த வரி விதிப்பு இந்திய வர்த்தகர்களுக்கு பேரிடியாக இருக்கும் என்றே அச்சம் எழுந்துள்ளது.
வரி விவகாரத்தில் ஆகஸ்டு 28 ஆம் திகதிக்குள் அமெரிக்கா - இந்தியா இடையே ஒருமித்த கருத்து எட்டாவிட்டால், விவசாயிகள் பாஸ்மதி பயிரிடுவதை விட்டுவிட்டு சாதாரண அரிசிக்குத் திரும்புவார்கள் என்றே பஞ்சாப் மாகாண விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 1,200 டொலருக்கு வாங்கப்படும் ஒரு டன் பாஸ்மதி அரிசி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டால் கூடுதலாக 600 டொலர் செலவாகும், அதே நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய 228 டொலர் மட்டுமே கூடுதலாக செலவாகும். மட்டுமின்றி, தேங்கியுள்ள சரக்குகளை விற்பனை செய்யவும் முடியாத நெருக்கடி மில் உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |