அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான்
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டதன் நடுவே, ஈரானிய இராணுவ விமானங்கள் உள்ளிட்ட தளவாடங்களை தங்கள் விமான நிலையங்களில் நிறுத்த அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.
இரகசியமாக உதவி
மத்திய கிழக்கில் போர் வெடித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களிலிருந்து முக்கியமான இராணுவத் தளவாடங்களை பாதுகாக்கவே இரகசியமாக பாகிஸ்தான் உதவியுள்ளது.

மட்டுமின்றி, ஈரான் தனது சில பயணிகள் விமானங்களை அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் நிறுத்தியிருந்தது; இருப்பினும், அந்த விமானங்களில் இராணுவ விமானங்களும் இருந்தனவா என்பது உறுதி செய்யப்படவில்லை.
பாகிஸ்தானின் ராவல்பிண்டிக்கு வெளியே அமைந்துள்ள நூர் கான் விமானப்படைத் தளத்தில், ஈரான் தனது முக்கியப் பாதுகாப்புத் தளவாடங்கள் பலவற்றை இடமாற்றம் செய்துள்ளதாக, அமெரிக்க வெளியீடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் மிக முக்கியமான நூர் கான் விமானப்படைத் தளத்திலேயே ஈரானுக்கு தனது இராணுவ மற்றும் விமானப் படை சொத்துக்களைப் பாதுகாக்க ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியுள்ளது.
ஆனால், இந்த விவகாரம் தங்களுக்குத் தெரியும் என்றும், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், ஈரானுடனான போர்நிறுத்தத்தை ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, அந்த விமானங்கள் நூர் கான் தளத்திற்கு அனுப்பப்பட்டன என்றும் அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இராணுவ தளவாடங்களை நகர்த்தியது, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இருந்து தனது எஞ்சிய இராணுவ மற்றும் விமானப் படை சொத்துக்களில் சிலவற்றைப் பாதுகாக்கும் ஈரானின் முயற்சியின் ஒரு பகுதி என்றே அமெரிக்க அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பங்கு
வெளியாகியுள்ள இந்த அறிக்கை அமெரிக்காவில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மத்தியஸ்தப் பேச்சுவார்த்தை செயல்பாட்டில் பாகிஸ்தானின் நடுநிலைமையை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
ஆனால், நூர் கான் விமானப்படை தளம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளை பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் நிராகரித்துள்ளதுடன், அத்தகைய தகவல்கள் நம்பத்தகாதவை என்றும், நூர் கான் வளாகம் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியில் அமைந்துள்ளது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, போரின் போது மஹான் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான ஈரானிய பயணிகள் விமானம் ஒன்று காபூல் விமான நிலையத்தில் சிறிது காலம் நிறுத்தப்பட்டிருந்ததை அண்டை நாடான ஆப்கானிஸ்தான் ஏற்றுக்கொண்டது.
மஹான் பயணிகள் விமானம் மட்டுமே அந்நாட்டில் உள்ள ஒரே ஈரானிய விமானம் என்றும் ஆப்கானிய அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய ஒரே நட்பு நாடான இஸ்ரேல் சமாதான முன்னெடுப்பில் பாகிஸ்தானின் பங்கு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளதுடன், ஹமாஸுக்கும் லஷ்கர்-இ-தைபா உள்ளிட்ட பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களுக்கும் இடையே வளர்ந்து வரும் தொடர்புகள் குறித்தும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |