புதிதாக பிறந்த பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற கொடூர தந்தை!
பாகிஸ்தானில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழமைவாத முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட நாடான பாகிஸ்தானில் பெண் சிசுக்கொலையின் மற்றொரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் ஆண் குழந்தை வேண்டும் என்று தீவிரமாக விரும்பிய ஒரு நபர், தனது ஏழு நாட்களே ஆன மகளை சுட்டுக் கொன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சொந்த ஊரான மியான்வாலியில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
மூத்த பொலிஸ் அதிகாரி இஸ்மாயில் காரக்கின் கூற்றுப்படி, ஷாஜாயிப் கான் என்ற நபர் மஷால் பாத்திமாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஜன்னத் என்று அவளது தாத்தா பாட்டி பெயரிட்டனர். ஆனால், பெண் குழந்தை பிறந்த செய்தியைக் கேள்விப்பட்ட ஷாஜாயிப் கான், தனது மனைவியையும் மகளையும் சபிக்கத் தொடங்கிள்ளார்.
விடயத்தை கேட்டதும் ஷாஜாயிப் கான் கோபமடைந்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதோடு ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்து தனது மகளைக் கொன்றதாகவும் பாத்திமா கூறினார்.
"ஆத்திரத்தில் கொதித்தெழுந்த எனது கணவர் முதலில் என்னை அடித்து எங்கள் மகளை திட்டினார். பின்னர் அலமாரியில் இருந்த துப்பாக்கியை எடுத்து குழந்தை சுட்டார்" என்று பாத்திமா கூறினார்.
திருமணமாகி முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதில் தனது கணவர் வெறித்தனமாக இருந்ததாக பாத்திமா பொலிஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.
"எனது கணவர் ஒரு ஆண் குழந்தையைப் பெறுவதில் வெறித்தனமாக இருந்தார், ஆனால் அவர் தனது சொந்த மகளைக் கொல்வது போன்ற ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்வார் என்று குடும்பத்தில் யாருக்கும் தெரியாது" என்று அவர் கூறினார்.
குழந்தையை கொன்ற ஷாஜாயிப் கான் தப்பியோடினார், அவரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பாத்திமாவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் கான் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்தார், குற்றவாளியை விரைவில் கைது செய்யுமாறு மாகாண முதல்வருக்கு உத்தரவிட்டுள்ளார்.