மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் தாக்குவதற்கா? தற்காப்பிற்கா? பாகிஸ்தான் பிரதமர் விளக்கம்
மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தமானது முழுக்க முழுக்க தற்காப்பிற்காக மட்டுமே என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் விளக்கியுள்ளார்.
மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்
பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் 3 நாடுகளும் இணைந்து மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை சமீபத்தில் கையெழுத்திட்டன.
துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் முன்னெடுத்த இந்த ஒப்பந்தமானது இஸ்லாத்தின் மிகப் புனிதமான நகரமும், நபிகள் நாயகம் பிறந்த இடமுமான மெக்காவில் கையெழுத்தானது.

இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான தாக்குதல், அவை அனைத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் விளக்கம்
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து அந்நாட்டின் பிரதமர் முகமது ஷாபாஸ் ஷெரீப் தெளிப்படுத்தியுள்ளார்.
அதில், இந்த பாதுகாப்பு ஒப்பந்தமானது எந்தவொரு ஆக்கிரமிப்பு நோக்கமும் கொண்டது அல்ல, மாறாக முற்றிலும் தற்காப்பு சார்ந்தது மட்டுமே என்று வலியுறுத்தியுள்ளார். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டி வளர்ச்சி மற்றும் செழிப்பை அதிகரிக்க செய்வதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்றும் எடுத்துரைத்தார்.

மேலும் இந்த மெக்கா ஒப்பந்தத்தை “முஸ்லிம் உம்மாவின் வலிமையான ஆதாரம்” என்றும் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வர்ணித்துள்ளார்.
பல வருட தூதரக மற்றும் இராஜதந்திர முயற்சிகளுக்கு பிறகே இந்த ஒப்பந்தமானது எட்டப்பட்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |