இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என நிபந்தனை: WCL தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான்
pakistan pull out wcl 2026 demand india to apologise: இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையை WCL நிர்வாகம் ஏற்க மறுத்த நிலையில், தொடரிலிருந்து பாகிஸ்தான் விலகியுள்ளது.
WCL தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான்
ஓய்வு பெற்ற சர்வதேச வீரர்கள் பங்குபெற்று விளையாடும் WCL T20 தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3 ஆம் திகதி தொடங்கி அக்டோபர் 18 ஆம் திகதி வரை நடைபெற்று வருகிறது.

இதில், இந்தியா, அவுஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
ஷாஹித் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி, இந்த தொடரில் பங்கேற்பதாக இருந்தது. அந்த அணியில் ஷோயப் மாலிக், முகமது ஹபீஸ், சர்பராஸ் அகமது, வஹாப் ரியாஸ் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றிருந்தனர்.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் WCL தொடரில் பங்கேற்க தடையில்லாச் சான்றிதழ் (NoC) தராததால், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி பங்கேற்க முடியவில்லை என கூறப்பட்டது.
இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என நிபந்தனை
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற WCL தொடரில், ஆபரேஷன் சிந்தூர் காரணமாக ஏற்பட்ட போர் பதற்றத்தினால், ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் உள்ளிட்ட மூத்த இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இதனையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானுக்கு புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில், இறுதிப்போட்டி வரை பாகிஸ்தான் முன்னேறியது.
இந்திய அணி புறக்கணித்ததால் கோபமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்த விளையாட்டில் அரசியல் கலப்பதால் இனி இந்த தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது என எச்சரித்தது.
மேலும், தொடரில் பங்கேற்க கடந்த ஆண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு இந்திய வீரர்கள் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், தொடரின் போது பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க வேண்டும் எனவும் WCL நிர்வாகத்திடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிபந்தனை விடுத்துள்ளது.
ஆனால், WCL நிர்வாகம் இந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்த நிலையிலே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது அணியை அனுப்ப மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.