தண்ணீர் திறக்க மறுக்கும் இந்தியா - தமிழ் வம்சாவளி கனேடிய அமைச்சரிடம் உதவி கேட்ட பாகிஸ்தான்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக கனடாவிடம் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது.
பாகிஸ்தான் சென்றுள்ள அனிதா ஆனந்த்
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்ததோடு, 47 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துளார்.

கடந்த 20 ஆண்டுகளில் கனடாவின் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது இதுவே முதல்முறை ஆகும்.
மேலும், இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடிய அமைச்சர் பாகிஸ்தானுக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.
அனிதா ஆனந்தின் தந்தை தமிழநாட்டை பூர்விகமாக கொண்டவர் ஆவார். அவரது தாயார் பஞ்சாபை சேர்ந்தவர் ஆவார்.

இந்த பயணத்தின் போது, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் துணை பிரதமர் இஷாக் டார் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
கனடாவிடம் கோரிக்கை இந்த சந்திப்பின் போது இஷாக் டார், அனிதா ஆனந்திடம் சிந்து நதி நீர் பிரச்சினையை எழுப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய இஷாக் டார், "சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) நிறுத்தி வைப்பதாக அறிவித்ததன் மூலம், ஏற்கனவே நிலையற்ற பாதுகாப்புச் சூழலில் இந்தியா ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக மீட்டெடுப்பதற்கும், நீரை ஆயுதமாக்குவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சர்வதேச சட்டம் மற்றும் ஒப்பந்தக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கும் எங்கள் நட்பு நாடுகளின் ஆதரவை நாங்கள் நாடுகிறோம்" என்று கூறினார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) என்பது, 1960 ஆம் ஆண்டில் உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.

இது சிந்துப் படுகையின் 6 நதிகளின் நீரைப் பகிர்வதை நிர்வகித்து, கிழக்கு நதிகளை இந்தியாவுக்கும், மேற்கு நதிகளைப் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கும் ஒதுக்குகிறது.
சிந்து நதி நீர் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய ஆதாரம் ஆகும். இந்தியா இந்த நீரை நிறுத்தியுள்ளதால் பாகிஸ்தான் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது.
சிந்து நதி நீரை திறக்க மறுத்தால் ரத்த ஆறு ஓடும், இந்தியா மீது போர் தொடுப்போம் என முன்னதாக பாகிஸ்தானின் மூத்த அரசியல் தலைவர்கள் பேசி வந்தனர்.
பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் நதிநீர் பகிர்வு குறித்து மீண்டும் விவாதிக்கப்பட்டாலும், அது புதிய மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ் மட்டுமே நடக்கும் என்றும் இந்தியா உறுதியாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |