வெளிநாட்டுக் கடனில் இருந்து மொத்தமாக மீளும் வகையில் ஆசிய நாடொன்றிற்கு அடித்த ஜாக்பாட்
பாகிஸ்தானின் தர்பேலாவில் ஒரு பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அதன் மொத்த மதிப்பு சுமார் 636 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தங்கம் இருப்பது உறுதி
குறித்த தகவலை ஏர் கராச்சியின் தலைவரும், பாகிஸ்தான் வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் முன்னாள் மூத்த துணைத் தலைவருமான ஹனிஃப் கோஹர் பகிர்ந்து கொண்டார்.

கோஹர் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தர்பேலா அணையில் இருந்து பல மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகவும், முறையாக பரிசோதிக்கப்பட்டு, அவை தங்கம் இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தர்பேலாவில் காணப்படும் தங்கம் பாகிஸ்தானின் முழு வெளிநாட்டுக் கடனையும் அடைக்கும் அளவுக்குப் பெரியது என்று கோஹர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் ஏற்கனவே பாகிஸ்தானின் SIFC நிர்வாகம் மற்றும் பாகிஸ்தான் வங்கியின் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, சுரங்கப் பணிகளுக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய நிறுவனங்களை பாகிஸ்தான் அணுகியுள்ளதாகவும் கோஹர் குறிப்பிட்டுள்ளார்.

636 பில்லியன்
பிரதமர் உத்தியோகப்பூர்வ ஒப்புதல் அளித்தவுடன், தர்பேலாவிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் பணி தொடங்கும் என்றார். தர்பேலா தங்கம் தொடர்பில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஆகியோருக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டதாகவும், இருவரும் நேர்மறையாக பதிலளித்தனர் என்றும் கோஹர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பகுப்பாய்வின் அடிப்படையில், தர்பேலா தங்கத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பு சுமார் 636 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என நம்பப்படுகிறது என்றார்.

மட்டுமின்றி, வாய்ப்பு அமைந்தால் அவரது நிறுவனம் முதலீடு செய்யவும், பிரித்தெடுக்கும் பணிகளை மேற்கொள்ளவும், தங்கத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான தரவுகளின் அடிப்படையில் பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன் என்பது 131 பில்லியன் முதல் 133 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது. சீனாவிடம் இருந்து மட்டும் 2023 நவம்பர் வரையில் 69 பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |