ஜின்னா குறித்த ரகசியத்தை மறைத்த மும்பை மருத்துவர்கள் - உயரிய விருது வழங்கும் பாகிஸ்தான்
pakistan announced highest award for mumbai doctors kept jinnah health secret: ஜின்னாவின் நோய் குறித்த ரகசியத்தை மறைத்த இரு மும்பை மருத்துவர்களுக்கு பாகிஸ்தான் உயரிய விருதை அறிவித்துள்ளது.
மும்பை மருத்துவர்களுக்கு உயரிய விருது வழங்கும் பாகிஸ்தான்
1947ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பிரிவினையுடன் சுதந்திரமும் பெற்றன. முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக இருந்த முகமது அலி ஜின்னா, பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கிய காரணமாக இருந்தார். பாகிஸ்தானின் நிறுவனரான அவர் அறியப்படுகிறார்.

1946 ஆம் ஆண்டில், ஜின்னாவின் எக்ஸ் ரேயை பரிசோதித்த டாக்டர் படேலும் டாக்டர் தாய்போ-கூவும், அவருக்கு காசநோய் முற்றிய நிலையை அடைந்ததை கண்டறிந்தோடு, அவர் இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என்றும் முடிவு செய்தனர்.
ஆனால், தொழில்முறை இரகசியத்தன்மையை கடைப்பிடித்ததன் காரணமாக அவர்கள் இதனை வெளியே சொல்லவில்லை.
அந்த காலகட்டத்தில் காசநோயைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் எதுவும் கண்டறியப்படாததால், அது ஒரு கொடிய நோயாகவே கருதப்பட்டது.
தனது அரசியல் மற்றும் தலைமைத்துவ பிம்பத்தை பாதுகாக்க தனது சகோதரி பாத்திமா ஜின்னா உள்ளிட்ட மிக நெருங்கியவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிவிக்காமல் முற்றிலும் ரகசியமாக வைத்திருந்தனர்.
பிரிவினை பெற்ற ஒரு ஆண்டில் 1948 செப்டம்பர் 11 ஆம் திகதி ஜின்னா காசநோய் காரணமாக உயிரிழந்தார்.
ஓரிரு ஆண்டுகளில் ஜின்னா இறந்துவிடுவார் என தெரிந்திருந்தால், இந்த பிரிவினை மற்றும் சுதந்திரத்தை மவுண்ட் பேட்டன் தாமதப்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது, இது வரலாற்றின் போக்கை மாற்றியிருக்க கூடும் என வரலாற்று ஆசிரியர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்த ரகசியத்தை பாதுகாத்து பாகிஸ்தான் உருவாக ஒருவகையில் காரணமாக இருந்த பார்சி சமூகத்தைச் சேர்ந்த இரு மருத்துவர்கள், பாகிஸ்தானின் உயரிய குடிமை விருதான நிஷான்-இ-இம்தியாஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விருதுக்கான தேர்வு குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர் அஹ்சன் இக்பால் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "விருதுகள் குழுவின் தலைவர் என்ற முறையில், பம்பாயின் பார்சி சமூகத்தைச் சேர்ந்த, காயிதே ஆஸம் முஹம்மது அலி ஜின்னாவின் மரணப் படுக்கையில் இருந்த நோயின் இரகசியத்தை உண்மையுடன் பாதுகாத்த, ஒரு பொது மருத்துவர் மற்றும் ஒரு கதிரியக்க நிபுணர் ஆகிய இரண்டு குறிப்பிடத்தக்க மருத்துவர்களை நிஷான்-இ-இம்தியாஸ் விருதுக்குப் பரிந்துரைக்கும் பாக்கியம் பெற்றதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

தங்கள் தொழில்முறை உறுதிமொழிக்கு அவர்கள் காட்டிய விசுவாசம், பாகிஸ்தான் உருவாக்கத்தை சாத்தியமாக்கிய சூழ்நிலைகளுக்கு அறியாமலேயே ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக அமைந்தது" என தெரிவித்துள்ளார்.
ஜின்னாவின் மறைவுக்கு 78 ஆண்டுகளுக்குப் பிறகு, டாக்டர் படேல் மற்றும் டாக்டர் தாய்போ-கூ ஆகியோருக்கான பாகிஸ்தானின் இந்த விருது, 2027 மார்ச் மாதம் நடைபெறும் விழாவில் அவர்களுக்கு முறைப்படி மரணத்திற்குப் பின் வழங்கப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |