குடிக்க தண்ணீர் இல்லை.., சட்டவிரோதமாக இந்தியா வந்த பாகிஸ்தான் தம்பதியினர் பாலைவனத்தில் உயிரிழப்பு
சட்டவிரோதமாக எல்லை கடந்து இந்தியா வந்த பாகிஸ்தான் தம்பதியினர் பாலைவனத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தம்பதியினர் மரணம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்டம் மிர்பூர் மத்தல்லோ பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரவிக்குமார் (17) மற்றும் சாந்திபாய் (15). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
இதில் ரவிக்குமாருக்கு வேலை இல்லாததால் தம்பதியினர் இந்தியா வர முடிவு செய்தனர். இதற்காக இருவரும் விசா கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால், விசா மறுக்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து ராஜஸ்தானுக்குள் வந்தனர்.
அப்போது, ஜெய்சால்மர் பகுதியிலுள்ள தார் பாலைவனத்தின் வழியாக பயணம் செய்த போது தம்பதியினர் உயிரிழந்துவிட்டனர். இவர்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் உடலில் நீர் சத்து குறைந்து உயிரிழந்துள்ளனர்.
அதாவது, அதிகப்படியான தாகத்தால் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர். இவர்களது சடலமானது கடந்த 28-ம் திகதி கிடைத்துள்ளது.
இது குறித்து பொலிஸார் கூறுகையில், "தார் பாலைவனத்திலுள்ள பிபியான் பகுதியில் இவர்களது உடல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் பெரிய அளவிலான குடிநீர் கேனை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வந்துள்ளனர்.
ஆனால், குடிநீர் தீர்ந்து விட்டதால் அதிகப்படியான தாகத்தால் உயிரிழந்துவிட்டனர். தம்பதியினரின் உடல் அருகே காலியான குடிநீர் கேன் இருந்தது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |