பாலஸ்தீன குடும்பங்கள் எடுத்துள்ள முடிவு... அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் மீது வழக்கு
காஸாவில் இஸ்ரேலின் இராணுவத்திற்கு அமெரிக்காவின் ஆதரவு குறித்து பாலஸ்தீனிய குடும்பங்கள் செவ்வாயன்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் மீது வழக்கு தொடர்ந்துள்ளன.
அட்டூழியங்கள் செய்ததாக
குறித்த போரினால் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதுடன், மனிதாபிமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், காஸா மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் அட்டூழியங்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்ரேலிய இராணுவப் பிரிவுகளுக்கு நிதியுதவி மற்றும் இராணுவ ஆதரவைத் தொடர, அமெரிக்க மனித உரிமைச் சட்டங்களை வெளிவிவகாரச் செயலர் ஆண்டனி பிளிங்கன் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மொத்தமாக மீறும் தனிநபர்கள் அல்லது பாதுகாப்புப் படை பிரிவுகளுக்கு அமெரிக்க இராணுவ உதவி வழங்குவதை Leahy சட்டங்கள் தடை செய்கின்றன.
மேலும், உலக நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்காவும், சர்வதேச மன்னிப்புச் சபையும் இஸ்ரேல் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்களைச் செய்ததாக குற்றம் சாட்டின. இஸ்ரேல் தொடர்பிடைய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறது.
மட்டுமின்றி, எந்த பெரிய கொள்கை மாற்றமும் இல்லாமல் இஸ்ரேலுக்கான ஆதரவை தக்கவைத்ததற்காக அமெரிக்கா மனித உரிமை குழுக்களின் விமர்சனங்களை எதிர்கொள்கிறது.
ஐந்து பாலஸ்தீனியர்களால்
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி காஸா போர் தொடங்கியதன் பின்னர் இஸ்ரேலிய மனித உரிமை மீறல்கள் எப்போதுமில்லாத வகையில் அதிகரித்துள்ள நிலையில், Leahy சட்டத்தைப் பயன்படுத்துவதில் வெளிவிவகார அமைச்சகத்தின் தோல்வி அதிர்ச்சியளிப்பதாகவும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்துள்ள போரில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 45,000 கடந்துள்ளது. மட்டுமின்றி, காஸாவின் மொத்த மக்களும் இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன், மிக மோசமான பசி மற்றும் பட்டினி நெருக்கடியை ஏற்படுத்தியது.
தற்போது காஸா, மேற்குக் கரை மற்றும் அமெரிக்காவில் உள்ள ஐந்து பாலஸ்தீனியர்களால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை காஸா ஆசிரியர் ஒருவரே முதன்மையாக முன்னெடுத்துள்ளார்.
அவர் தற்போதைய போரில் ஏழு முறை இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பதுடன் தமது குடும்ப உறுப்பினர்கள் 20 பேர்களை இழந்துள்ளார் என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |