இஸ்ரேல் பணயக்கைதிகளாக வைத்திருக்கும் 95 பாலஸ்தீன சுகாதாரப் பணியாளர்கள் நிலை என்ன?
இஸ்ரேலிடம் பணயக்கைதிகளாக சிக்கியுள்ள மருத்துவர் ஹுஸாம் அபு சஃபியா உட்பட 80 மருத்துவர்களை விடுவிக்க பரவலான கோரிக்கை எழுந்துள்ளது.
விடுவிக்க வேண்டும்
லண்டனில் செயிண்ட் தாமஸ் மருத்துவமனைக்கு வெளியே இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இஸ்ரேலில் தற்போது பயங்கரமான சூழ்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும் என்று அந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
சட்டவிரோத போராளிகள் சட்டத்தின் கீழ் மருத்துவர் அபு சஃபியாவின் தன்னிச்சையான காவலை இஸ்ரேலிய நீதிமன்றம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்த நிலையிலேயே லண்டனில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் விவாதத்திற்குரிய அந்த சட்டமானது பரவலாக கண்டிக்கப்பட்டும் வருகிறது. 80 மருத்துவர்கள் உட்பட 94 சுகாதார ஊழியர்கள் இஸ்ரேலில் கடும் சித்திரவதைக்கு உட்பட்டு வரும் நிலையில்,
இஸ்ரேலிய தடுப்புக்காவலில் இருந்தபோது இன்னொரு ஐந்து சுகாதாரப் பணியாளர்கள் இறந்துவிட்டனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர், அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை.
இஸ்ரேலிய இராணுவத்தால்
பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 1,722 சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான சுகாதாரப் பணியாளர்கள் பணியில் இருந்தபோது அவர்களின் மருத்துவமனைகள் அல்லது ஆம்புலன்ஸ்களில் இருந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கடத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இஸ்ரேலிய தடுப்புக்காவலில் பாலஸ்தீனியர்கள் அனுபவிக்கும் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகங்களை HWW மற்றும் பிற அமைப்புகள் பட்டியலிட்டுள்ளன.
இந்த நிலையில், இஸ்ரேல் கிட்டத்தட்ட நூறு சுகாதாரப் பணியாளர்களைத் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறும் கொடுஞ்செயலாகும் என மருத்துவர் ரெபேக்கா இங்கிலிஸ் பதிவு செய்துள்ளார்.
மேலும், இஸ்ரேலிய தடுப்புக்காவலில் பாலஸ்தீன கைதிகள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்பதற்கான விரிவான ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் நலனில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு காஸாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநரான அபு சஃபியா, டிசம்பர் 27, 2024 அன்று இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் கடைசியாகச் செயல்பட்ட மருத்துவமனைகளில் ஒன்று இந்த கமால் அத்வான் மருத்துவமனை.
நம்பகமான தகவல்
இந்த விவகாரம் தொடர்பில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவிக்கையில், இஸ்ரேலிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அபு சஃபியா மீது குற்றச்சாட்டு அல்லது விசாரணை இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இடைவிடாத குண்டுவீச்சு மற்றும் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் தனது சொந்த மகன் கொடூரமாக கொல்லப்பட்ட போதிலும், அபு சஃபியா பணியில் தொடர்ந்தார். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து, சித்திரவதை, உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் மோசமான சிகிச்சைகளுக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளன,
இதில் குறிப்பிடத்தக்க எடை இழப்பு மற்றும் போதுமான மருத்துவ கவனிப்பு இல்லாமை, சுகாதாரம் மற்றும் சட்ட ஆலோசகரை சரியான நேரத்தில் அணுக மறுப்பது ஆகியவையும் அடங்கும்.
ஹமாஸ் படைகளின் அக்டோபர் 7 தாக்குதலை அடுத்து, போர் பிரகடனம் செய்த பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம் காஸாவில் 94 சதவீத மருத்துவமனைகளை திட்டமிட்டு தரைமட்டமாக்கியதுடன், இனி அந்த மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளினர்.
அத்துடன் திறமையான மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பலர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |