பான் கார்டு பயன்கள்; எதற்கெல்லாம் கட்டாயம்? முழு விவரங்கள்
பான் கார்டு பயன்கள், எப்படி பெறுவது உள்ளிட்ட முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
பான் கார்டு
பான் கார்டு என்பது இந்தியாவில் வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 பத்து இலக்கங்கள்(எண்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் அடங்கிய) கொண்ட நிரந்தர கணக்கு எண்(Permanent Account Number - PAN) அட்டை ஆகும்.

இதில், பயனரின் பெயர், புகைப்படம், கையெழுத்து, தந்தை பெயர், பிறந்த திகதி, QR code, 10 இலக்க பான் எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
வங்கி கணக்கு தொடங்க, பங்குசந்தையில் வர்த்தக கணக்கு தொடங்க, வீடு, வாகனம் கல்வி என அனைத்து வகையான கடன் பெற , சொத்துக்கள் வாங்க, ரூ.50,000க்கும் மேல் முதலீடு செய்ய, ரூ.5 லட்சத்துக்கு மேல் நகை வாங்க என பல வகையான நிதி பயன்பாட்டிற்கும் பான் கார்டு கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.
யார் பெறலாம்?
ஆதார் கார்டு மூலம் பான் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும். இந்தியாவில் உள்ள யார் வேண்டுமானாலும் பான் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும். 18 வயதுக்கு குறைந்தவர்கள் பெற்றோரின் கையொப்பம் மூலம் பான் பெற முடியும்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைனில் NSDL அல்லது UTITSL இணையதளத்திற்கு சென்று தேவையான தகவல்களை வழங்கி பான் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும். அல்லது பான் சேவை மையம் அல்லது இ-சேவை மையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

ரூ.107 செலுத்தினால் பான் அட்டை, இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். டிஜிட்டல் வடிவிலான e-pan இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
UTITSL இணையதளம் மூலம் பான் கார்டில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் முடியும்.
பயன்கள்
ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போல பான் அட்டையை இந்தியா முழுவதும் அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியும்.
இந்தியாவில், வருமான வரி சட்டத்தின் கீழ் வருமானம் உள்ளவர்கள், வணிகம் மற்றும் தொழில் செய்வோர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பான் கட்டாயம் ஆகும்.
மேலும், இந்தியாவில் தொழில் அல்லது முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களும் பான் பெறுவது கட்டாயம் ஆகும்.
வருமான வரி தாக்கல் செய்யவும், வருமான வரி ரிட்டர்ன் பெறவும் பான் கட்டாயம் ஆகும்.
பணப் பரிமாற்றங்கள், கடன்கள், முதலீடுகள், நிலம், வீடு, நகை போன்ற சொத்துக்கள் வாங்குதல், என ஒரு நபரின் நிதி செயல்பாடுகளை ஒரே மையத்தில் கண்காணித்து வரி ஏய்ப்பை தடுக்க பான் பயன்படுகிறது.
பான் கார்டு ஆதார் கார்டு இணைப்பு
2025 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

வருமான வரி இணையதளத்தில் பான் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்ட பின்னர், உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும் அதனை உள்ளிட்டால் உங்களது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்படும்.
2025 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால், பான் கார்டு செயழிந்து அதன் மூலம் பெரும் சேவைகள் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 1 முதல் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
போலியான பான் அல்லது இரு பான்கள் பயன்படுத்தினால் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |