வெளிநாடுகளில் ரகசியமாக, முறைகேடாக பல கோடிகள் முதலீடு! சிக்கும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்! ரசிகர்கள் அதிர்ச்சி
வெளிநாடுகளில் பிரபலங்கள் முறைகேடாக பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெயர் அடிப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான ஆவணங்கள் பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) ல் வெளியாகியுள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists (ICIJ)) மூலம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து கசிந்த 11.9 மில்லியன் ஆவணங்களை 600க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதில், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
இந்த பட்டியலில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான மூன்று மாதங்களில் விர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனத்தை கலைக்கும்படி சச்சின் கேட்டுக்கொண்டதாகவும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்த நிதிமுறைகேடு முதலீடு அறிக்கையை தயாரித்த அமைப்பு சச்சின் டெண்டுல்கர் வழக்கறிஞரிடம் கேட்ட போது, சச்சின் முதலீடு சட்டப்பூர்வமானது இது வரி அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.
இந்த அன்னிய முறைகேடு நிதி முதலீட்டில் அரசியல்வாதிகளின் கை குறித்த உலகவரைபடத்தில் இந்தியா தரப்பில் 6 என்றும் பாகிஸ்தான் தரப்பில் 7 என்றும் காட்டப்பட்டுள்ளது. பணக்கார நாடுகள் ஏற்படுத்தியுள்ள நிதி ரகசிய செயல்முறை அல்லது அமைப்பு சட்டம் எப்படி இவர்களுக்கு சாதகமாக வளைக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய மிகப்பெரிய வெளிச்சத்தைக் காட்டியுள்ளதாக இந்த பாண்டோரா ஆவண விசாரணை அறிக்கை தெரிவிக்கின்றது.
2016 ஆம் ஆண்டு பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபென்செக்கா என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் ஊடகத்தில் வெளியானது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டது. இதில், திரைப்பட நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், டிஎல்ஃப் நிறுவனத்தின் தலைவர் கேபி சிங் மற்றும் அவருடைய ஒன்பது குடும்ப உறுப்பினர்கள், கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.