காகித ஒப்பந்தங்கள் பாதுகாப்பை அளிக்காது: சவுதி அரேபியாவுக்கு ஈரான் கடும் மிரட்டல்
பாகிஸ்தான், துருக்கி உட்பட மூன்று நாடுகளின் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதிக்குப் பாதுகாப்பை அளிக்காது என ஈரான் மிரட்டல்.
பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கிக்கு இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஈரான் விமர்சித்ததுடன், இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், அது சவுதிக்கு நீடித்த பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.
சவுதிகள் உணர வேண்டும்
ஈரானின் நாடாளுமன்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கை ஆணையத்தின் உறுப்பினரே அந்த மூன்று நாடுகளின் ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளதுடன் மிரட்டலும் விடுத்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பில் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்கர்களைப் பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக அரவணைத்து வந்தும் அது தங்களுக்குப் பாதுகாப்பைத் தரவில்லை என்பதைப் போலவே, துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான வெறும் காகித அளவிலான ஒப்பந்தமும் தங்களுக்குப் பாதுகாப்பைத் தராது என்பதை சவுதிகள் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சவுதி அரேபியா தனது கொள்கைகளைச் சீர்திருத்தினாலே, பாதுகாப்புக்காக மற்றவர்களிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
سعودیها باید بدانند که توافق کاغذی با ترکیه و پاکستان برای آنها امنیتآور نیست، همانطور که سالها شیردهی یکطرفه به آمریکاییها برایشان امنیت نیاورد. سیاستهایتان را اصلاح کنید تا نیاز نباشد از دیگران #گدایی_امنیت کنید.
— ابراهیم رضایی (@EbrahimRezaei14) August 7, 2026
முன்னதாக, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போரின் பின்னணியில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், மூன்று நாடுகளும் மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்றழைக்கப்படும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இஸ்ரேலின் அரசியல் ஆதாயங்களுக்காக மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்தப் போரானது, விருப்பமில்லாத வளைகுடா நாடுகளையும் உள்ளிழுத்து, ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்திற்கும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் முன்னெடுத்த இந்த ஒப்பந்தமானது இஸ்லாத்தின் மிகப்புனிதமான நகரமும், நபிகள் நாயகம் பிறந்த இடமுமான மெக்காவில் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தின்படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான தாக்குதல், அவை அனைத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கையில்,
இந்த ஒப்பந்தமானது, எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலுக்கும் எதிரான கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான எந்தவொரு ஆயுதத் தாக்குதலும், அவை அனைத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்றும் குறிப்பிடுகிறது.
மேலும், இது மூன்று நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது.
இம்மூன்று நாடுகளையும் இணைக்கும் நீடித்த சகோதரத்துவ மற்றும் இஸ்லாமிய ஒற்றுமைப் பிணைப்புகளின் அடிப்படையிலும், அவற்றின் பொதுவான உத்திசார் நலன்கள் மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், அவற்றுக்கிடையேயான நீண்டகால வரலாற்றுத் தொடர்புகளால் இது வழிநடத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருமுனைத் தாக்குதல்
சவுதி அரேபியாவில், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஈரான் மீதான போரின் ஒரு பகுதியாகப் பல தாக்குதல்களுக்கு உள்ளான சவுதி அரேபியா, தனது பாதுகாப்பு கூட்டாண்மைகளைப் பன்முகப்படுத்த முயன்று வந்தது.

அதன் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் எண்ணெய் வசதிகள், ஈரான் மற்றும் ஹவுதிகள், ஈராக்கிய போராளிக் குழுக்கள் போன்ற அதன் பிராந்திய கூட்டாளிகளால் தொடர்ச்சியாக ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொண்டிருந்தன.
இதனிடையே, ஹவுதிகள் மற்றும் ஈராக்கிய போராளிக் குழுக்களிடம் இருந்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் ஒருங்கிணைப்பில் இருமுனைத் தாக்குதல் ஒன்று சவுதி அரேபியா மீது முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக உளவுத்தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |