தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் சுட்டுக்கொலை! மற்றொரு வீரர் கைது..கூறிய அதிர்ச்சி காரணம்
இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச பாரா தடகள வீரர் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரா ஒலிம்பிக் வீரர்
தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வீரர் சிராக் தியாகி (24). தங்கப்பதக்கம் வென்ற இவர் உத்தரப்பிரதேசத்தின் முராத்நகரின் பசந்த்பூர் சேத்லி கிராமத்தில் வசித்து வந்தார்.
நேற்றைய தினம் காஸியாபாத்தில் உள்ள சாய் உப்வன் அருகே தியாகி சடலாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து மாற்றுத்திறனாளி தடகள வீரரும், இதற்கு முன்பு தியாகியுடன் பயிற்சி பெற்றவருமான யாஷ் காதிக் என்பவரை பொலிஸார் கைது செய்தனர். அவர் சிராக் தியாகியை சுட்டுக் கொன்றது தெரிய வந்தது.
பழிதீர்க்க சுட்டுக்கொலை
முதற்கட்ட பரிசோதனை மற்றும் சம்பவ இடத்தில் இருந்து சேகரிப்பட்ட ஆதாரங்கள், தியாகி சுட்டுக் கொல்லப்பட்டதை உணர்த்துவதாக நகர துணை ஆணையர் தவால் ஜெயஸ்வால் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, ஆவண சரிபார்ப்பு நடைமுறையின்போது தியாகி என்பவர் காதிக்கிற்கு எதிராக புகார் அளித்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
அந்த புகாரைத் தொடர்ந்து, காதிக்கின் தகுதி ரத்து செய்யப்பட்டதாகவும், இதுவே அவருக்குள் மனக்கசப்பையும், பழிவாங்கும் எண்ணத்தையும் தூண்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |