தங்க மகன் மாரியப்பனுக்கு கொடுக்கப்பட்டுள்ள கவுரவம்! பாராலிம்பிக் போட்டியின் போது அவர் இதை செய்வார் என அறிவிப்பு
தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், பாராலிம்பிக் துவக்க விழாவில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்லவுள்ளார்.
ஜப்பானில், மாற்றுத்திறனாளிகளுக்கான டோக்கியோ பாராலிம்பிக் போட்டி வரும் வரும் ஆகஸ்ட் 24-ஆம் திகதி முதல் செப்டம்பர் 5-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக தமிழக உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு(25) நியமிக்கப்பட்டுள்ளார். இவர், துவக்க விழாவில் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பின் போது இந்திய மூவர்ணக் கொடி ஏந்திச் செல்ல உள்ளார்.
இதுகுறித்து இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தீபா மாலிக் கூறுகையில், டோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியை மாரியப்பன் வழிநடத்த உள்ளார்.
தவிர, அணிவகுப்பில் மூவர்ணக் கொடி ஏந்திச் செல்வார் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த ரியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி–42 பிரிவு போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன், நிறைவு விழா அணிவகுப்பின் போது மூவர்ணக் கொடி ஏந்தி வந்தார்.
அதன்பின், 2018-ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய பாரா விளையாட்டின் துவக்க விழாவில் மூவர்ணக் கொடி ஏந்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.