மகள் பள்ளிக்குச் சென்றிருந்த நேரத்தில் நாடுகடத்தப்பட்ட பெற்றோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி
சிறுமி ஒருத்தி பள்ளிக்குச் சென்றிருந்த நேரத்தில், அவளுடைய பெற்றோர் நாடுகடத்தப்பட்டதைக் குறித்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
லெபனான் நாட்டில் வாழும் சிறுமியான Raghad, பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது, வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள்.
பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் காணாமல் பயந்து நடுநடுங்கி வாய் விட்டு அழத்துவங்கினாள் Raghad.
Raghad அழுதுகொண்டிருப்பதைக் கண்ட பக்கத்துவீட்டுப் பெண் ஒருவர், அவளுடைய அத்தையை தொலைபேசியில் அழைத்து விடயத்தைக் கூற, பதறியடித்துக்கொண்டு ஓடோடி வந்த அந்தப் பெண், Raghadஐ தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
நடந்தது என்ன?
Raghadஇன் பெற்றோர் சிரியா நாட்டவர்கள். சிரியா நாட்டிலிருந்து அகதிகளாக வந்தவர்களான அவர்களுடைய ஆவணங்கள் காலாவதியாகிவிட்டிருக்கின்றன.
ஒரு நாள் காலை 9.00 மணியளவில் அவர்களுடைய வீட்டுக் கதவைத் தட்டிய லெபனான் இராணுவத்தினர், முக்கியமானவை என கருதப்படும் சில பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு உடனே புறப்படுமாறு அவர்களிடம் கூற, தங்கள் மகள் Raghad பள்ளி சென்றுள்ளதாகவும், தயவுகூர்ந்து அவள் வரும்வரை தங்களை வீட்டிலிருக்க அனுமதிக்குமாறும் Raghadஇன் பெற்றோர் இராணுவத்தினரிடம் மன்றாடியுள்ளார்கள்.
ஆனால், அவர்களுடைய கெஞ்சலை ஏற்றுக்கொள்ளாத இராணுவத்தினர், அவர்களைக் கைது செய்துள்ளார்கள். பின்னர், அவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள், மகளிடம் கூட விடைபெற்றுக்கொள்ளாமலே.
Raghad லெபனான் நாட்டில் பிறந்தவள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரிய அகதிகளை திருப்பி அனுப்பும் லெபனான்
உலகிலேயே அதிக அளவில் சிரிய புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொண்ட நாடு லெபனான் தான் (அதன் மக்கள்தொகையை ஒப்பிடும்போது).
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் லெபனானில் சிரியர்களுக்கெதிரான அலை ஒன்று பரவிவருகிறது. சிரியர்கள் தங்கள் வளங்களுக்கும் சேவைகளுக்கும் போட்டியாக வந்துள்ளதாக லெபனான் மக்கள் கருதுகிறார்கள்.
அத்துடன், வன்முறைகளின் பின்னணியில் சிரியர்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்படுவதுடன், லெபனான் நாட்டவர்களை விட சிரியா நாட்டவர்களுக்கு அதிக குழந்தைகள் பிறப்பதால், அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால், லெபனான் நாட்டின் மக்கள் தொகை சமநிலை பாதிக்கப்படுவதாக லெபனானியர்கள் கருதுகிறார்கள்.
ஆகவே, ஆரம்பத்தில் சிரியர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், இப்போது அதையும் தாண்டி சிரியர்களை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பவேண்டும் என்ற எண்ணம் உருவாகிவிட்டது.
அதன் விளைவாகத்தான் இப்போது Raghad தன் பெற்றோரைப் பிரிந்து வாழ்கிறாள். அவளுக்கோ தன் குடும்பத்துடன் இணைய ஆசை. ஆனால், அவர்களோ மீண்டும் சிரியாவுக்கு அவளை அழைத்து வருவதை விரும்பவில்லை.
எப்படியாவது மீண்டும் லெபனானுக்கு வர அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், இப்போதைய சூழலில் அது அவ்வளவு எளிதல்ல!