பாரிஸ் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர் யார்? பிரித்தானியர் காயம்., வெளியான கூடுதல் விவரங்கள்
பாரிஸில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலியானவர் ஜேர்மன் சுற்றுலா பயணி என தெரியவந்துள்ளது.
சனிக்கிழமை இரவு, மத்திய பாரிஸில் ஈபிள் கோபுரத்திற்கு அருகில் வீதியொன்றில் கத்தி மற்றும் சுத்தியல் தாக்குதலில் ஜேர்மானியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இந்த சம்பவத்தில் ஒரு பிரித்தானியர் உட்பட மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய 26 வயதான பிரான்ஸ் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், அவரது பெயர் அர்மண்ட் ஆர் (Armand R) என்றும் அவரது பெற்றோர் ஈரானை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் அல்லாஹு அக்பர் என்று கூறி தாக்கியதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
தாக்குதல் நடத்தியவர் ஒரு தீவிர இஸ்லாமியவாதி என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் (Gérald Darmanin) தெரிவித்தார்.
ஜேர்மன் சுற்றுலாப் பயணி
தாக்குதலில் கொல்லப்பட்டவர் செவிலியராக பணிபுரிந்த ஜேர்மன் சுற்றுலாப் பயணி ஆவார்.
Quai de Grenelle பகுதியில் தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டபோது, அவர் தனது மனைவியுடன் இருந்துள்ளார்.
ஒரு டாக்சி ஓட்டுநரின் தலையீட்டால் மனைவியின் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும், தாக்குதல்தாரி சீன் ஆற்றின் அருகே உள்ள பாலத்தின் வழியாக தப்பி ஓடிவிட்டதாகவும் அவர் கூறினார்.
பிரித்தானிய சுற்றுலா பயணி
ஆற்றின் வடக்குப் பகுதிக்குச் சென்ற பிறகு, அவர் மேலும் இரண்டு பேரைத் தாக்கினார். அதில் ஒருவர் 66 வயதான பிரித்தானிய சுற்றுலா பயணி ஆவார். தாக்குதல்தாரி அவரது கண்ணில் ஒரு சுத்தியலால் அடித்துள்ளார்.
மற்றொருவர் சுமார் 60 வயதுடைய ஒரு பிரெஞ்சுக்காரர். இருவரும் தாக்குதலுக்குப் பிறகு அவசர சேவைகளால் சிகிச்சை பெற்றனர், இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் நிரம்பி வழியும் பீர் ஹக்கீம் பாலத்திற்கு அருகில் தாக்குதல்தாரி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பாலஸ்தீனர்களின் மரணத்திற்கு பிரான்ஸ் உடந்தை...
தாக்குதல் நடத்தியவர் "அல்லாஹு அக்பர்" என்று கத்துவதைக் கேட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆப்கானிஸ்தானிலும் பாலஸ்தீனத்திலும் பல முஸ்லீம்கள் இறந்து கொண்டிருப்பதால் தான் வருத்தமடைந்ததாக அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
காசாவில் பாலஸ்தீனர்களின் மரணத்திற்கு பிரான்ஸ் உடந்தையாக இருந்ததாக அவர் நம்புவதாக கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாதத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் பான் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஜேர்மனியரின் குடும்பத்தினருக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |