நடுவானில் விமானத்தில் நிகழ்ந்த பயங்கரம்... கணவன் உயிரைக் காப்பாற்றிய மனைவி
நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் ஜன்னல் கண்ணாடி திடீரென உடைய, முதியவர் ஒருவர் விமானத்திலிருந்து வெளியே இழுக்கப்பட இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
நடுவானில் நிகழ்ந்த பயங்கரம்...
இன்று காலை 5.55 மணிக்கு, கிரீஸ் நாட்டிலிருந்து RYANAIR விமானம் ஒன்று ஜேர்மனி நோக்கிப் புறப்பட்டுள்ளது.

விமானம் உயர எழுந்து 20,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென டமார் என பயங்கர சத்தம் ஒன்று கேட்டுள்ளது.
அதாவது, அந்த விமானத்தின் எஞ்சினிலிருந்து ஒரு துண்டு உடைந்து வந்து ஜன்னல் கண்ணாடியில் மோத, ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்க, திடீரென ஜன்னல் திறந்ததால் ஏற்பட்ட அழுத்தக்குறைவு காரணமாக, ஜன்னல் அருகே உட்கார்ந்திருந்த செர்பியா நாட்டவரான 61 வயது நபர் ஒருவர், ஜன்னல் வழியாக வெளியே இழுக்கப்பட்டுள்ளார்.
உடனே அவரது மனைவி அவரை இரு கைகளாலும் இறுக அணைத்துப் பிடித்துக்கொண்டுள்ளார். அருகிலிருந்த சில இளம்பெண்களும் அவரைப் பிடித்துக்கொள்ள, அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததாலும் அவர்கள் அவரை பிடித்துக்கொண்டதாலும் உயிர் தப்பியுள்ளார் அவர்.
சுமார் ஐந்து நிமிடங்கள் போராட்டத்துக்குப் பின் அவரை உள்ளே இழுத்துள்ளார்கள் அனைவரும்.

உடனடியாக விமானி விமானத்தை புறப்பட்ட இடத்துக்கே திருப்பிக் கொண்டுபோய் தரையிறக்க, தலையும் தோள்களும் விமானத்துக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்ததால் ஏற்பட்ட காயங்களுக்காகவும், அதிர்ச்சிக்காகவும் அந்த நபருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
பின்னர், காலை 9.53 மணியளவில் மாற்று விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் ஜேர்மனி புறப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |