ஜேர்மனியில் தடம் புரண்ட பயணிகள் ரயில்... 25 பேர்களின் நிலைமை கவலைக்கிடம்
ஜேர்மனியில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நிலை கவலைக்கிடம்
தென்மேற்கு பேடன்-வுர்ட்டம்பேர்க் மாகாணத்தில் உள்ள ரீட்லிங்கன் நகருக்கு அருகே காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் ரயில் சாரதி உட்பட மூவர் மரணமடைந்துள்ளனர்.
மட்டுமின்றி, 50 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதில் 25 பேர்களின் நிலை கவலைக்கிடம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் Deutsche Bahn நிர்வாகம் இச்சம்பவத்தை உறுதி செய்துள்ளதுடன், விபத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும், சுமார் 40 கிமீ தொலைவுக்கான ரயில் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனிடையே, Baden-Wurttemberg மாகாண உள்விவகார அமைச்சர் Thomas Strobl தெரிவிக்கையில்,
விபத்து நடந்தப் பகுதியில் கடுமையான காற்று வீசியதாகவும், மழை காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இங்கு பலத்த மழை பெய்துள்ளது, எனவே கனமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலச்சரிவு விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல நூறு பில்லியன்
சுமார் 100 பயணிகளுடன் சிக்மரிங்கென் நகரத்திலிருந்து உல்ம் நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது அந்த ரயில் தடம் புரண்டது. ஜேர்மன் போக்குவரத்து அதன் காலாவதியான உள்கட்டமைப்புக்காக பயணிகளால் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது, பயணிகள் அடிக்கடி ரயில் தாமதங்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த நிலையில், அடுத்த சில ஆண்டுகளில், குறிப்பாக உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்காக, பல நூறு பில்லியன் யூரோக்களை முதலீடு செய்வதாக ஜேர்மன் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
ஜூன் 2022 ல், தெற்கு ஜேர்மனியில் உள்ள பவேரியன் ஆல்பைன் ரிசார்ட் அருகே ஒரு ரயில் தடம் புரண்டு நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
ஜேர்மனியின் ஃபெடரல் புள்ளிவிவர அலுவலகத் தரவுகளின் அடிப்படையில், ரயிலில் பயணம் செய்வது காரில் பயணம் செய்வதை விட மிகவும் பாதுகாப்பானது, 2024 ஆம் ஆண்டில் ஜேர்மனியின் சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 2,770 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |