குழந்தைகளுக்கான பால் பவுடரில் நோய்க்கிருமிகள்... ஒரு குழந்தை உயிரிழந்ததால் பரபரப்பு
அமெரிக்காவில், குழந்தைகளுக்கான பால் பவுடரில் நோய்க்கிருமிகள் இருப்பதாக தெரியவந்துள்ளதையடுத்து, அந்த பால் பவுடரைத் தயாரித்த நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரச்சினை என்னவென்றால், அந்த பால் பவுடரிலிருந்து தயாரிக்கப்பட்ட பாலை அருந்திய குழந்தைகள் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு குழந்தை உயிரிழந்துவிட்டது.
அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள், Abbott நிறுவனத் தயாரிப்புகளான Similac, Alimentum மற்றும் EleCare என்ற பெயரில் வரும் பால் பவுடர்களை பயன்படுத்தவேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு அந்த நிறுவன பால் பவுடரை அருந்திய குழந்தைகள் குறித்து விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது. அந்த குழந்தைகள் அருந்திய பாலில் Salmonella என்ற கிருமி ஒரு பால் பவுடரிலும், Cronobacter sakazakiim என்னும் பயங்கர கிருமி மூன்று பால் பவுடர்களிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Abbott நிறுவனம், Similac, Alimentum மற்றும் EleCare ஆகிய தயாரிப்புகளில் 2022 ஏப்ரல் 1 காலாவதி திகதியுடைய குறிப்பிட்ட பால் பவுடர் தயாரிப்புகளை திருப்பிக் கொடுக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பால் பவுடரிலிருந்து தயாரிக்கப்பட்ட பாலை அருந்தியதால், உணவே நஞ்சாக, குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டதுடன், ஒரு குழந்தை உயிரிழந்தும் விட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.