கோபத்தில் பணியில் இருந்த நர்ஸை கொடூரமாக தாக்கிய நோயாளி: பிரித்தானியாவில் சம்பவம்
பிரித்தானியாவில் மருத்துவமனை ஒன்றில் A&E-யில் பணிபுரியும் செவிலியர் ஒருவர், காத்திருப்பதால் கோபமடைந்த நோயாளி ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆபத்தான கட்டத்தில்
இந்த விவகாரத்தில், கொலை முயற்சி வழக்கில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான செவிலியர் தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள தி ராயல் ஓல்ட்ஹாம் மருத்துவமனையில் வைத்தே அந்தப் பெண் கத்தியால் குத்தப்பட்டார். ஆனால், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது கத்தி அல்ல, கூரான பொருள் என்றே நேரில் பார்த்த பொதுமக்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
50 வயது கடந்த அந்த நர்ஸ் தற்போது ஆபத்தான கட்டத்தில் சிகிச்சையில் உள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது. நோயாளி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் ஒருகட்டத்தில் தாக்குதல் நடந்ததாக நர்ஸ் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல மணி நேரமாக காத்திருக்க நேர்ந்ததை அடுத்து, அந்த நோயாளி கோபமடைந்திருக்கலாம் என அந்த நர்ஸ் தெரிவித்துள்ளார். வெளியான தகவலின் அடிப்படையில் பிரித்தானியாவின் பல மருத்துவமனைகளில் சுமார் 12 மணி நேரமாக அரை மில்லியன் மக்கள் சிகிச்சைக்கு காத்திருந்ததாக தெரிய வந்துள்ளது.
காவலில் வைக்கப்பட்டுள்ளார்
இதனிடையே, கொலை முயற்சி என்ற சந்தேகத்தின் பேரில் 37 வயது நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசார் தெரிவித்துள்ளனர். அந்த நபர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், அதே நேரத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவம் சமூக ஊடக பக்கத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் குறிப்பிடுகையில், நமது மருத்துவமனைகள் கூட தற்போது பாதுகாப்பான இடங்களாக இல்லை. லேபர் அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |