தண்டனை காலத்திற்கும் அதிகமாக 4.7 ஆண்டுகள் சிறையில் இருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தண்டனை காலத்திற்கு அதிகமாக 4.7 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இழப்பீடு வழங்க உத்தரவு
சட்டப்பூர்வ தண்டனையை மீறி நான்கு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மத்தியப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்திய மாநிலமான மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த சோஹன் சிங் மீது வன்கொடுமை புகார் எழுந்ததால் கடந்த 2005-ம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் கடந்த 2017-ம் ஆண்டில் தண்டனை காலத்தை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிடப்பட்டது.
ஆனால், 8 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் மாதம் தான் விடுதலை செய்யப்பட்டார் சோஹன் சிங். தண்டனை காலத்திற்கும் அதிகமாக சிறையில் இருந்த அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்து நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்தியப் பிரதேச மாநில சட்ட சேவைகள் ஆணையத்திற்கு, மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் விரிவான கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டது.
தண்டனைக் காலத்தை முடித்திருந்தாலும் அல்லது ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும் வேறு எந்த கைதியும் தொடர்ந்து சிறையில் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.
மேலும், வன்கொடுமை குற்றவாளியான சோஹன் சிங்கிற்கு நீண்டகால சிறைத்தண்டனை விதிப்பது "மிகவும் அதிர்ச்சியளிக்கிறது" என்று முன்னர் கூறிய அமர்வு கடுமையாக கண்டனம் தெரிவித்தது.
இதுபோன்ற அதிகப்படியான சிறைவாசம் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும், அதை மன்னிக்க முடியாது என்றும் குறிப்பிட்டது.
அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் நச்சிகேதா ஜோஷி, சோஹன் சிங் கூடுதல் சிறைவாசமாக தோராயமாக 4.7 ஆண்டுகள் இருந்ததை தெளிவுபடுத்தினார்.
இதையடுத்து, சோஹன் சிங்குக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |