ஐபிஎல் அணியில் அதிர்ஷ்டம் இல்லாத டீம் எது தெரியுமா? - கவாஸ்கர் விளக்கம்
ஐபிஎல் அணியில் அதிர்ஷ்டம் இல்லாத அணி குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனிடையே முன்னாள் வீரர்கள் ஐபிஎல் அணிகளுக்கு தங்களது அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் பஞ்சாப் அணி குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் என்னைப் பொறுத்தவரை பஞ்சாப் அணி தான் ஐபிஎல் அணிகளில் அதிர்ஷ்டம் இல்லாதது. 2014 ஆம் ஆண்டு மட்டும் ஒரு முறை மட்டுமே அவர்கள் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளார்கள் என்று நினைக்கிறேன். அந்த அணியில் நல்ல திறமையான வீரர்கள் இருந்தும் அவர்களின் திறமை வெளிப்படாமல் உள்ளது.
இதுவரை நடைபெற்றுள்ள 14 சீசனில் 2008 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறை மட்டுமே பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அணியில் ரபாடா, பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன், ஷாருக்கான், ஷிகர் தவான் போன்ற முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளதால் கண்டிப்பாக மாறுதல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.