இஸ்ரேலின் முயற்சிகள் தோல்வி... அமெரிக்கா - ஈரான் இடையே எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம்
மத்திய கிழக்கையே ஆட்கொண்ட பல மாத காலப் போருக்குப் பிறகு, ஈரானுடனான ஒப்பந்தம் தற்போது நிறைவடைந்துவிட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அனைவருக்கும் வாழ்த்துகள்
ஹார்முஸ் நீரிணை தற்போது மீண்டும் கப்பல் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்றும், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவ்ட்டுள்ள ட்ரம்ப், அனைவருக்கும் வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹார்முஸ் நீரிணையைத் தடைகளற்றுத் திறந்துவிடுவதற்கும், அதேவேளையில் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையை உடனடியாக நீக்குவதற்கும் நான் இதன் மூலம் முழுமையான அங்கீகாரம் அளிக்கிறேன் எனவும், உலகின் கப்பல்களே, உங்கள் இயந்திரங்களை இயக்கத் தொடங்குங்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்த ஒப்பந்தத்தை முதலில் அறிவித்தார்.
சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், உத்தியோகப்பூர்வமாக கையெழுத்திடும் நிகழ்வு ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா நிர்பந்திக்கப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

ட்ரம்பின் தீவிர முயற்சி
107 நாள் போருக்குப் பிறகு, இந்த ஒப்பந்தம் போர்நிறுத்தத்தை 60 நாட்களுக்கு நீட்டிக்கவும், நீரிணையை மீண்டும் திறக்கவும், அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் லெபனானும் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதனிடையே, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய உக்கிரமான குண்டுவீச்சுக்குப் பிறகு, இன்று அதிகாலை நடைபெற்ற பரபரப்பான தொலைபேசி உரையாடலின்போது ட்ரம்ப் இஸ்ரேலியப் பிரதமரை மிகக் கடுமையாகச் சாடினார்.
அரசியல் காரணங்களுக்காக போரை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நெதன்யாகு, அமைதிப்பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்.
காஸா போர் தொடர்பிலும், அமைதிப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த பல முதன்மையான பாலஸ்தீன தலைவர்களை குண்டுவீச்சில் படுகொலை செய்தார்.

தற்போது, ஈரான் தொடர்பில் ட்ரம்பின் தீவிர முயற்சிகளை மொத்தமாக சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் நெதன்யாகு ஈடுபட்டு வந்தாலும், ஈரான் ஒப்பந்தமானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஆனால் லெபனான் மீது தாக்குதல் தொடுத்து, ஈரானை கோபப்படுத்த வேண்டாம் என ட்ரம்ப் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, ஈரானிடமும் பதில் தாக்குதலைத் தொடங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலில் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளும் நெதன்யாகுவின் அடுத்த நகர்வுகளைப் பொறுத்தே, ஈரானுடனான அமெரிக்காவின் இந்த அமைதி ஒப்பந்தத்தின் ஆயுள் தொடர்பில் தெரியவரும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |