நள்ளிரவில் சமூக ஊடகத்தில் பரவிய தகவல்... வாஷிங்டன் மருத்துவமனைகளில் குவிந்த மக்கள்: ஒரு சுவாரஸ்ய செய்தி
வாஷிங்டனில் நள்ளிரவில் சமூக ஊடகத்தில் பரவிய ஒரு செய்தியைக் கேட்டு, இரவு உடையுடன் மக்கள் குறிப்பிட்ட சில மருத்துவமனைகள் முன் குவிந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தேறியது.
நடந்தது என்னவென்றால், வாஷிங்டன் மாகாணத்திலுள்ள Seattle நகரில் அமைக்கப்பட்டுள்ள ப்ரீஸர் ஒன்று திடீரென பழுதடைந்துள்ளது. அந்த ப்ரீஸரில், 1,650 டோஸ் மாடெர்னா தடுப்பூசி சேமித்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
அந்த ப்ரீஸர் பழுதானதால், அந்த தடுப்பூசி மருந்துகள் முழுவதும், அதிகாலை 3.30 மணிக்குள் வீணாகும் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக மருத்துவமனைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைகள், யாருக்கெல்லாம் தடுப்பூசி போட விருப்பமோ அவர்கள் உடனடியாக குறிப்பிட்ட மருத்துவமனைகளை அணுகலாம் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியுள்ளன.
தகவல் வெளியானதும், மக்கள், சிலர் தங்கள் இரவு உடைகளுடனேயே மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர்.
அங்கு, உடனடியாக அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, அவர்கள் யாராக இருந்தாலும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார அலுவலர்கள் அறிவித்துள்ளார்கள்.
நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால், தடுப்பூசி வீணாவது தடுக்கப்பட்டதுடன், ஏராளமானோர் தடுப்பூசி பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியுள்ளார்கள்.



