நாட்டை விட்டு வெளியேற மீண்டும் ஆப்கானியர்கள் காபூலில் குவிந்ததால் பரபரப்பு! வெளியான புகைப்படங்கள்
ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 15ம் திகதி ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியதை தொடர்ந்து, நாட்டில் பெரும்பாலான மாகாணங்களை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, தலிபான்கள் அளித்த கால அவகாசத்தின் படி ஆகஸ்ட் 31ம் திகதியோடு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு படைகள் முற்றிலுமாக நாட்டை விட்டு வெளியேறின.
ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் நாட்டை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்த சம்பவங்கள் வீடியோவாக வெளியாகி உலகளவில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஐ.எஸ்(கே) நடத்திய இரண்டு தற்கொலை தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியது.
எனினும், நாட்கள் செல்ல செல்ல புதிய இடைக்கால அரசாங்கத்தை அறிவித்த தலிபான்கள், படிபடியாக தங்கள் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர்.
இந்நிலையில், பல நாட்களாக முடிக்கிடந்த தலைநகர் காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் நேற்றிலிருந்து திறக்கப்பட்டது.
பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்ட பிறகு, தலிபான் நிர்வாகத்தின் அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மையிலிருந்து தப்பித்து நாட்டை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான மக்கள் பாஸ்போர்ட் பெற அலுவலகத்திற்கு படையெடுத்துள்ளனர்.
பாஸ்போர்ட் அலுவலக வாயிலுக்கு முன் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் குவிந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
பாஸ்போர்ட் பெற குறிப்பாக பெண்களுக்கு தலிபான்கள் என்னென்ன கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர் என விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.