குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி
கனடாவில் வாழ்ந்துவந்த இலங்கையர் ஒருவர், தனது குடும்பம் முழுவதையும் வன்முறைக்கு இழந்து தவிக்கும் நிலையில், கனடா தரப்பிலிருந்து அவருக்கு ஒரு ஆறுதலளிக்கும் செய்தி கிடைத்துள்ளது.
இலங்கை குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
இலங்கையரான தனுஷ்க விக்கிரமசிங்க, அவரது மனைவியான தர்ஷனி ஏகநாயக (35), பிள்ளைகள் இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரனயா விக்ரமசிங்க (3) கெல்லி விக்கிரமசிங்க (2 மாதக்குழந்தை) ஆகியோர், கனடாவின் தலைநகரான Ottawaவிலுள்ள Barrhaven என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வாழ்ந்துவந்தனர்.

கனடாவில் கல்வி கற்க வந்த இலங்கையரான ஃபெப்ரியோ டி ஸோய்சா (19) என்பவர் தனக்கு தங்க இடம் இல்லை என்று கூறியபோது, அவரை தன் வீட்டு அடித்தளத்தில் தங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் தனுஷ்க.
ஆனால், டி ஸோய்சா சரியாக படிக்காததால் தனது மாணவர் விசா ரத்தாகிவிடும், அதற்குப் பிறகு இலங்கையிலிருக்கும் தனது குடும்பமும் தனக்கு பணம் அனுப்பாது என பயந்துள்ளார்.

Credit : Ottawa police/Superior Court of Justice
ஆகவே, முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு, தனுஷ்க குடும்பத்தையும், அவர்கள் வீட்டில் தங்கியிருந்த அமரகோன் என்பவரையும் கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்தார் டி ஸோய்சா.
தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட டி ஸோய்சாவுக்கு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு ஆறுதலளிக்கும் செய்தி
இதற்கிடையில், கனடாவில் தன் குடும்பம் முழுவதையும் இழந்து தவித்துக்கொண்டிருந்த விக்கிரமசிங்கவுக்கு உதவுவதற்காக அவரது தந்தையும் சகோதரரும் கடந்த ஆண்டு கனடா வந்தார்கள்.

விக்கிரமசிங்கவுக்கு உதவுவதற்காக வந்த தாங்கள் புலம்பெயர்தல் சவால்களை எதிர்கொள்வதாகக் கூறி, தங்களுக்கு ஃபெடரல் அரசு உதவவேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தார்கள்.
இந்நிலையில், விக்கிரமசிங்கவின் தந்தை மற்றும் சகோதரரின் நிரந்தரக் குடியிருப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்களுடைய சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |