கொரோனா தடுப்பூசி போட்டவுடன் மயங்கி விழுந்த நபர்.. அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் மரணம்!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் மயங்கி விழுந்த நபர், அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை நகரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. மும்பை புறநகர்ப பகுதியான Goregaon பகுதியைச் சேர்ந்த 65 வயதான நபர், மதியம் 3:30 மணிக்கு தடுப்பூசி போட ஜோகேஸ்வரியில் உள்ள மில்லட் நர்சிங் ஹோமிற்கு வந்துள்ளார்.
அவருக்கு மதியம் 3:37 மணிக்கு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியான Covishield 0.5ml போடப்பட்டுள்ளது. நிமிடங்களில் அந்த நபர் மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்ட அவர் மாலை 5:05 மணிக்கு அதாவது ஒன்றரை மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். உடற்கூராய்வுக்காக அவரது உடல் ஆர்.என் கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மும்பை நகரில் தடுப்பூசி போட்ட பிறகு ஏற்பட்ட முதல் மரணம் இதுவாகும். எனினும், நிபுணர் குழு ஆய்வு செய்து வருவதால் 65 வயதான நபர் மரணமடைந்ததை தடுப்பூசியுடன் நேரடியாக தொடர்பு படுத்த முடியாது என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இறந்த நபர் பல இதய பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்ததாக உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியா முழுவதும் தடுப்பூசி போட்ட பிறகு சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது, எனினும் இதில் ஒருவர் கூட தடுப்பூசி பாதிப்பால் இறக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பிவாண்டியில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 40 வயதான சுகாதார ஊழியர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.