வீட்டுக்குள் நுழைய முயன்ற கொடிய விஷப்பாம்பை இரண்டு மணி நேரம் போராடி துண்டாக்கி கொன்றுவிட்டு உயிரை விட்ட 2 நாய்கள்!
இந்தியாவில் எஜமானர் வீட்டுக்குள் நுழைய முயன்ற விஷப்பாம்பை 2 மணி நேரம் போராடி கொன்றுவிட்டு தங்களின் உயிரை தியாகம் செய்த இரண்டு செல்லப்பிராணி நாய்களின் விஸ்வாசம் மனதை உருக்கியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஜெய்ரம்பூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதன்படி ஷிரோ மற்றும் கோகோ என்ற இரண்டு நாய்களை மருத்துவர் ராஜன் தனது வீட்டில் வளர்த்து வந்தார். நேற்று அவர் வீட்டருகில் கருப்பு நிற கொடிய விஷப்பாம்பு வந்த நிலையில் வீட்டுக்குள் உள்ளே நுழைய முயன்றது.
ஆனால் பாம்பை உள்ளே நுழைய விடாமல் ஷிரோவும், கோகோவும் தடுத்தது. இரண்டு மணி நேரமாக இந்த சண்டை நீடித்த நிலையில் பாம்பை இரண்டு துண்டுகளாக கிழித்து நாய்கள் கொன்றது.
ஆனால் அதே நேரத்தில் சண்டையின் போது இரு நாய்களையும் பாம்பு பல முறை கொத்தியதால் இரண்டு நாய்களும் அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்தன.
இது குறித்து நாய்களின் உரிமையாளர் மருத்துவர் ராஜன் கூறுகையில், ஷிரோ மற்றும் கோகோ மீது எங்கள் குடும்பம் மிகுந்த அன்பு வைத்திருந்தோம்.
எங்களைக் காப்பாற்ற இரண்டு செல்லப்பிராணிகளும் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளது. இந்த தியாகத்தை நாங்கள் மறக்க மாட்டோம் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
உயிரிழந்த இரண்டு நாய்களான ஷிரோ மற்றும் கோகோவை ராஜன் குடும்பத்தார் தகனம் செய்தனர்.