பெட்ரோல் விலை ரூ. 3 குறைப்பு! எப்போது முதல் நடைமுறைக்கு வருகிறது தெரியுமா? மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்
பெட்ரோல் மீதான வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பலரும் எதிர்பார்த்த ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை தமிழகத்தில் லிட்டருக்கு ரூ 3 குறையவுள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீதான வரியில் லிட்டருக்கு ரூ.3 அளவுக்குக் குறைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வரிக் குறைப்பால், பெட்ரோல் விலையில் ரூ.3 குறையும். பெட்ரோல் மீதான வரிக்குறைப்பால் தமிழக அரசுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
பெட்ரோல் விலை குறைவதால், உழைக்கும் மற்றும் நடுத்தரக் குடும்பத்துக்கு நிவாரணமாக அமையும் என்று அறிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.