எதிர்பார்ப்புக்கு மாறாக இன்று முதல் பிரான்சில் குறைய இருக்கும் பெட்ரோல் விலை: எவ்வளவு தெரியுமா?
உக்ரைன் போர் காரணமாக எரிபொருட்கள் விலை எந்த அளவுக்கு உயரப்போகிறதோ என்ற அச்சத்தில் உலகம் இருக்க, பிரான்சில் இன்று முதல் பெட்ரோல், டீஸல் விலை குறைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக மற்ற நாடுகளைப் போல பிரான்சிலும் எரிபொருட்கள் விலை உயரத்தான் செய்தது. பெட்ரோல் லிற்றருக்கு 2 யூரோக்கள் முதல் 2.27 யூரோக்கள் வரை அதிகரித்தது.
ஆனால், இன்று முதல் பிரான்சில் எரிபொருள் விலை குறையும் என பிரான்சின் இரண்டாவது அதிக எரிபொருள் வாங்கும் நிறுவனமான E. Leclercஇன் முதன்மை செயல் அலுவலராகிய Michel-Edouard Leclerc தெரிவித்துள்ளார்.
டீஸல் விலை லிற்றருக்கு 35 யூரோ சென்ட்களும், சில வகை பெட்ரோல் விலை லிற்றருக்கு 8 முதல் 10 சென்ட்களும் குறையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோக, அடுத்த வாரத்தில் எரிபொருள் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், நான் எரிபொருள் விலையில் உயர்வு ஏற்படும் என முன்னர் அறிவித்திருந்தேன். ஆனால், சந்தை நடவடிக்கை அப்படியே தலைகீழாக மாறி, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது, இது வித்தியாசமான ஒரு சந்தையாக உள்ளது, என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறுகிறார்.