இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக... பிரித்தானியாவில் 150 பென்ஸ் கடந்த பெட்ரோல் விலை
பிரித்தானியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக பெட்ரோல் விலை 150 பென்ஸ் கடந்ததுடன், டீசல் விலை 177 பென்ஸ் கடந்துள்ளது.
எரிபொருள் விநியோகம்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

ஈரான் போர் காரணமாக விலை உயர்வு என கூறப்பட்டாலும், உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பை அடுத்து உயர்ந்த விலையை விட தற்போது குறைவு என்றே தெரிவிக்கின்றனர்.
சராசரி குடும்ப வாகனம் ஒன்றில் ஈயமற்ற பெட்ரோலை நிரப்புவதற்கான செலவு, ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததைவிட தற்போது 9.50 பவுண்டுகள் அதிகமாக உள்ளது. டீசல் விலையும் 19 பவுண்டுகள் அதிகரித்து தற்போது ஒரு டாங்க் நிரப்புவதற்கு 97 பவுண்டுகள் செலவிட வேண்டும்.
இந்த நிலையில், பிரித்தானியாவின் இரண்டாவது மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளரான Asda, சில்லறை விற்பனையாளர்கள், உயர்ந்து வரும் எண்ணெய் விலைகளைத் தங்களின் சொந்த இலாபத்தை அதிகரிக்கப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
மட்டுமின்றி, ஈரான் போர் காரணமாகத் தாங்கள் எந்தவொரு எரிபொருள் நிலையத்தையும் மூடவில்லை என்றும், பாதிக்கப்பட்ட எரிபொருள் நிலையங்கள் ஏதேனும் இருப்பின், அடுத்த விநியோகத்திற்குப் பிறகு அவை மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பிரித்தானியா முழுவதும் எரிபொருள் விநியோகம் சீராக உள்ளது; எனவே, வழக்கமான வாங்கும் பழக்கங்களில் எவ்வித மாற்றமும் செய்யத் தேவையில்லை என பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெயின் விலை
மேலும் பெட்ரோல் விலை லிற்றருக்கு 150 பென்ஸ் கடந்தது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. போர் தொடங்கியதன் பின்னர் ஈயமற்ற பெட்ரோல் விலையில் 17 பென்ஸ் உயர்ந்துள்ளதாகவும், டீசல் லிற்றருக்கு 35 பென்ஸ் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் திட்டங்களை ஜனாதிபதி ட்ரம்ப் மேலும் ஒத்திவைத்த போதிலும், வெள்ளிக்கிழமையன்று ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் 110 டொலரைத் தாண்டியது.

கடந்த நான்கு வாரங்களாக, மொத்த எண்ணெய் விலைகள் பிரெண்ட் கச்சா எண்ணெயைப் பொறுத்தவரை பீப்பாய்க்கு 73 முதல் 116 டொலர் வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்துள்ளன.
மொத்த எண்ணெய் விலையில் ஏற்படும் ஒவ்வொரு 10 டொலர் உயர்வும், சில்லறை விற்பனை விலையை லிற்றருக்கு சுமார் 7 பென்ஸ் வரை உயர்த்துகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |