கொரோனா வைரஸ் உருமாறுவதற்கு எதிராக செயல்படும் ஃபைசர் தடுப்பூசி! விஞ்ஞானிகள் உறுதி
ஃபைசர் தடுப்பூசி பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் காணப்படும் COVID-19ன் புதிய விகாரங்களுக்கு எதிராக செயல்படுகிறது என ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜேர்மனிய நிறுவனமான பயோஎன்டெக்குடன் இணைந்தது அமெரிக்காவின் மருந்து தயாரிப்பாளர் Pfizer 95 சதவீதம் பயனளிக்கூடிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது. அதனை அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், கடந்த மாதம் தென்னாப்பிரிக்கா மற்றும் பிரித்தானியாவில் இரண்டு வெவ்வேறு உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அவை ஏற்கெனவே பரவிவரும் கொரோனா வைரஸை விட மிகவும் பரவக்கூடியதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, இதுவரை பல நாடுகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகள் புதிய உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக செயல்படாமல் போகலாம் என மருத்துவர்கள் எச்சரித்து வந்தனர்.
இந்நிலையில், டெக்சாஸ் பல்கலைக்கழக மருத்துவக் கிளையின் விஞ்ஞானிகளுடன் இணைந்து ஃபைசர் மருந்து நிறுவனத்தால் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்க வகையையும் சேர்த்து இதுவரை கண்டறியப்பட்ட 15 உருமாறிய கொரோனா வைரஸுடன் மொத்தம் 16 வகை கொரோனா வைரஸ்களில் ஃபைசர் மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
தற்போதைய அனைத்து பிறழ்வுகளுக்கு எதிராகவும் மருந்து செயல்படும் என்று உறுதிசெய்யப்பட்டதோடு, வைரஸின் உருமாற்றுத் திறனை கட்டுப்படுத்தும் என தெரியவந்துள்ளது. அவதாவது, இந்த மருந்து வைரஸ் மீண்டும் புதிய உருவத்தை பெறவிடாது. இருப்பினும், இந்த ஆய்வு இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.
ஃபைசர் / பயோஎன்டெக் மற்றும் செயற்கை மெசஞ்சர் ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மாடர்னா தடுப்புமருந்துகளை, தேவைப்பட்டால் வைரஸின் உருமாற்றங்களுக்கு ஏற்ப விரைவாக மாற்றியமைக்கலாம் என விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர். இந்த மாற்றங்களைச் செய்ய ஆறு வாரங்கள் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.