இந்தியர்களுக்கு ஜேர்மானியர்களை விட 40 சதவிகிதம் அதிக ஊதியம்: தூதர் தகவல்
ஜேர்மனியில் வேலை செய்யும் இந்தியர்கள், ஜேர்மானியர்களை விட 40 சதவிகிதம் அதிக ஊதியம் பெறுவதாக இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்கு அதிக ஊதியம்
இந்தியா வந்துள்ள இந்தியாவுக்கான ஜேர்மன் தூதரான Dr பிலிப் (Dr Philipp Ackermann), ஜேர்மனியில் வேலை செய்யும் இந்தியர்கள், ஜேர்மானியர்கள் பெறும் சராசரி ஊதியத்தைவிட 40 சதவிகிதம் அதிக ஊதியம் பெறுவதாகவும், இந்தியர்கள் ஜேர்மனியின் செல்வம் மற்றும் செழிப்புக்காக பெருமளவில் பங்களிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி மென்மேலும் இந்தியாவை நோக்கி தனது பார்வையைத் திருப்பும் நேரம் வரும்போது, இந்தியர்களுக்கு மேலும் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் Dr பிலிப் தெரிவித்தார்.
முந்தைய கல்வியாண்டில் ஜேர்மனிக்கு வந்த இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதற்கு முன்பைவிட 20 சதவிகிதம் அதிகம் என்று கூறிய Dr பிலிப், இந்த ஆண்டில் அது 35 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நிலவும் சாதகமற்ற சூழல் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறிய அவர், ஜேர்மனிக்கு கல்வி கற்க வரும் இந்திய மாணவர்கள், படித்துமுடித்த பிறகு 18 மாதங்கள் வரை ஜேர்மனியிலேயே தங்கியிருந்து வேலை தேடலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இப்போதைக்கு ஜேர்மன் தொழிலாளர் சந்தையில் சற்று மெதுவாக காணப்படுகிறது என்றும், அடுத்த ஆண்டில் அது வேகமெடுக்கும் என்றும், என்றாலும் இப்போதைக்கு தகவல் தொழில்நுட்பம், பொறியியல், செவிலியர் துறை மற்றும் முதியோர் மற்றும் நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் துறைகளில் ஏராளம் வேலைவாய்ப்புகள் உள்ளன என்றும் கூறியுள்ளார் Dr பிலிப்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |