ஈரான் போர்... தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்த ஆசிய நாடு
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் தீவிரமடைந்துவரும் நிலையில், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்துள்ளார்.
அவசரநிலை பிரகடனம்
ஈரான் போர் காரணமாக நாட்டின் எரிசக்தி விநியோகத்திற்கு ஏற்படவிருக்கும் உடனடி ஆபத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிலிப்பைன்ஸ் போக்குவரத்துத் தொழிலாளர்கள், பயணிகள் மற்றும் நுகர்வோர் குழுக்கள் வியாழக்கிழமை முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
ஈரான் போர் தொடர்பில் மார்கோஸ் நிர்வாகம் விரைவாக முடிவெடுக்கத் தவறிவிட்டது என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அவசரகால நடவடிக்கையின் ஒரு பகுதியாக, எரிபொருள், உணவு, மருந்து, விவசாயப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் சீரான போக்குவரத்து, விநியோகம், பகிர்வு மற்றும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மார்கோஸ் கூறியுள்ளார்.
மேலும், ஓராண்டுக்கு அமுலில் இருக்கும் இந்த அவசரகாலப் பிரகடனமானது, சரியான நேரத்திலும் போதுமான அளவிலும் விநியோகத்தை உறுதி செய்வதற்காக எரிபொருள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களைக் கொள்முதல் செய்யவும், தேவைப்பட்டால் ஒப்பந்தத் தொகையின் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

எரிபொருள் கையிருப்பு
அத்துடன், பெட்ரோலியப் பொருட்களின் பதுக்கல், இலாபமீட்டல் மற்றும் விநியோகத்தைக் கையாளுதல் ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தற்போதைய நுகர்வு அளவுகளின் அடிப்படையில், நாட்டில் இன்னும் சுமார் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது என்று எரிசக்தித் துறை செயலாளர் ஷரோன் காரின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் கூடுதல் கையிருப்பை உருவாக்குவதற்காக, தென்கிழக்கு ஆசியாவிற்கு உள்ளேயும் அதற்கு வெளியிலும் உள்ள நாடுகளில் இருந்து 1 மில்லியன் பீப்பாய் எண்ணெயைக் கொள்முதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆனால் இந்த அளவை எட்டுவதில் நிச்சயமற்ற தன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் காரின் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |