இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளுக்கு பயணத் தடை நீக்கம் - பிரபல நாடு அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்குவதாக பிலிப்பின்ஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடை விதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், கொரோனா தொற்று சூழல் காரணமாக இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பிலிப்பின்ஸ் அரசு தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இந்த அறிவிப்பை ரத்து செய்து பிலிப்பின்ஸ் நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் செப்டம்பர் 6-ஆம் திகதி அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) வழங்கியுள்ளார். பிலிப்பின்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.