இன்று இளவரசி டயானாவின் பிறந்தநாள்: பிள்ளைகளுடன் சில புகைப்படங்கள்
இளவரசி டயானா இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர் இன்று தனது 65ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார்.
இந்நிலையில், பிரித்தானிய ஊடகங்கள் பல அவரை நினைவுகூரும் வகையில் அவரது புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டுள்ளன.

இளவரசி டயானாவின் பிறந்தநாள்
இளவரசி டயானா, 1961ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 1ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Sandringham எஸ்டேட்டில் அமைந்துள்ள பார்க் ஹவுஸ் என்னும் வீட்டில் பிறந்தார்.

அந்த வீடு, மகாராணி இரண்டாம் எலிசபெத்தால் டயானா குடும்பத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
டயானா முதல் முறையாக சார்லசை சந்தித்தது 1977ஆம் ஆண்டு. அப்போது டயானாவுக்கு வயது 16, சார்லசுக்கு வயது 29. அந்த நேரத்தில், சார்லசும் டயானாவின் அக்காவான சாராவும் காதலித்துவந்ததாக கூறப்படுகிறது.
அதற்குப் பிறகுதான் சார்லசின் பார்வை டயானா மீது விழுந்துள்ளது. அவரை தன் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்துள்ளார் சார்லஸ்.

1981ஆம் ஆண்டு சார்லசும் டயானாவும் திருமணம் செய்துகொண்ட நிலையில், ஐந்தே ஆண்டுகளுக்குள் இருவருக்குமிடையிலான வயது வித்தியாசமும் பொருத்தமின்மையும் தெளிவாக புலப்படத் துவங்கியுள்ளது.
டயானா ஜேம்ஸ் ஹெவிட் என்பவருடன் பழகத் துவங்க, சார்லஸ் தன் முன்னாள் காதலியான கமீலாவுடனான உறவை மீண்டும் தொடர்ந்துள்ளார்.

இருவரும் பிரிய, இருவரின் விவாகரத்தும் 1996ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 28ஆம் திகதி முடிவாகியுள்ளது.
1997ஆம் ஆண்டு, தனது புதிய காதலரான டோடி ஃபயத் என்னும் எகிப்திய திரைப்பட தயாரிப்பாளருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது பாப்பராஸிகள் என்னும் புகைப்படக்காரர்கள் காரை துரத்த, கார் விபத்துக்குள்ளானதில் ட்யானாவும் டோடியும் உயிரிழந்துவிட்டார்கள்.

டயானா உயிரிழக்கும்போது அவருக்கு வயது 36. அவருடைய மரணம் சிறுபிள்ளைகளாக இருந்த அவரது பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி மனதில் ஆறாத காயமாக ஆழப் பதிந்துவிட்டது என்பதை அவர்கள் அவ்வப்போது தங்கள் தாயை நினைவுகூறும்போது அவர்கள் கூறும் வார்த்தைகள் மூலம் இன்றும் அறிந்துகொள்ளலாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |