நடுவானில் விமான பணிப்பெண்களுக்கு திடீர் உடல் நல பாதிப்பு: அவசர உதவியை அழைத்த விமானி
அமெரிக்காவில் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானமொன்றின் அனைத்து பணிப்பெண்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று, அதாவது, ஆகத்து மாதம் 13ஆம் திகதி காலை, ஃப்ரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, அமெரிக்காவின் Cleveland விமான நிலையத்திலிருந்து Fort Lauderdale நகரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, திடீரென ஒருவர் பின் ஒருவராக விமானத்திலிருந்த ஐந்து பணிப்பெண்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
அவசர உதவியை அழைத்த விமானி
உடனடியாக Fort Lauderdale விமான நிலைய விமான கட்டுப்பாட்டு அலுவலர்களை தொடர்புகொண்ட விமானி, தனது பணிப்பெண்கள் நான்கு பேருக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாகவும், ஐந்து பேருக்குமே தலைவலி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

நாங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, மருத்துவ உதவிக்குழுவினரை தயாராக நிறுத்திவைத்தால் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவரது கோரிக்கையின்படி விமானம் தரையிறங்கவும் தயாராக காத்திருந்த மருத்துவ உதவிக்குழுவினர் பணிப்பெண்களுக்கு சிகிச்சையளித்துள்ளார்கள்.
எதனால் அவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவராத நிலையில், விமானத்தில் பயன்படுத்தப்படும் எஞ்சின் ஆயில் அல்லது ஏதாவது ரசாயனப்பொருள் ஆவியாகி, அது விமானத்திலுள்ள ஏர் கண்டிஷனர் மூலம் விமானத்துக்குள் இழுக்கப்படுவதால் இப்படி நேரிடலாம் என்கிறார்கள் அனுபவம் உள்ளவர்கள்.
இதற்கிடையில், தானும் இதுபோன்ற அனுபவங்களை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் விமான பணிப்பெண்ணொருவர் கூற, இப்படி ஒரு அபாயம் உள்ளது, ஆனால், அதைக் குறித்து பேசாமல் விமானத் துறையினர் அமைதியாக இருக்கிறார்கள் என்கிறார் மற்றொரு பெண்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |